மது போதையில் தலைமை ஆசிரியரையே தாக்கிய மாணவன்- விழுப்புரத்தில் அதிர்ச்சி
மாணவனின் ஒழுங்கீன செயலால், மாணவனால் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டு மண்டையில் உடைப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் : கண்டமங்கலத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பனிரெண்டாம் வகுப்பு மாணவன் பள்ளியில் மது போதையில் தாக்கிய சம்பவத்தில் ஆசிரியரின் மண்டை உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையானதை அடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சேவியர் ராமச்சந்திரன் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக தினந்தோறும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மனநல சிகிச்சை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் விக்னேஷ் என்ற மாணவன் நேற்றைய தினம் மது போதையில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவிகளிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இதனையடுத்து மாணவி தலைமை ஆசிரியரிடத்தில் புகார் அளிக்கவே மாணவனை அழைத்து கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை தலையில் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் தலைமை ஆசிரியரின் பின் பக்க மண்டை பகுதியில் கிழித்து கொண்டு ரத்தம் வெளியேறியதை அடுத்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் தலைமை ஆசிரியர் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பியுள்ளார். மாணவனின் ஒழுங்கீன செயலால், மாணவனால் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டு மண்டையில் உடைப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் மாணவனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். பள்ளி கல்வி துறை நிர்வாகம் சார்பில் கண்டமங்கலம் அரசு பள்ளியிலிருந்து வளவனூர் அரசு பள்ளிக்கு மாற்றம் செய்துள்ளனர்.