Crime: கோவை அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியர் கைது
இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
கோவை அருகே அன்னூர் பகுதியில் 23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அரசு ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒரு இளம்பெண், தனியார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இதனால் அடிக்கடி அப்பகுதியில் உள்ள அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, அங்கு இளநிலை உதவியாளராக பணி புரிந்து வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் அன்னூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இளம்பெண்ணை தொடர்பு கொண்ட நபர் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், அதனால் சாப்பாடு வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பிய அப்பெண்ணும் உணவு வாங்கிச் சென்றுள்ளார்.
அப்போது பிரபாகரன் அந்த இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனிடையே பிரபாகரன் பணியிட மாறுதலில் கோவைக்கு மாற்றலாகி சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இளம்பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து இளம் பெண் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும், அப்பெண் பிரபாகரன் குறித்து விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து அப்பெண் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அன்னூர் காவல் துறையினர் பலாத்காரம், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரபாகரனை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்