பணி ஓய்வுக்குப்பின்னும் தேடிய போலீஸ்! 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி கண்டுபிடிப்பு!
ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், பூஜா காணாமல்போன கவலையில் மன அழுத்தத்துக்குச் சென்ற அவளுடைய தந்தை சந்தோஷ் தற்போது இல்லாதது கவலையை ஏற்படுத்துவதாக பூஜாவின் தாய் தெரிவித்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏழு வயது சிறுமியாக காணாமல் போனவரை மும்பை காவல் துறையினர் கண்டுபிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ள செயல் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கடத்தல் தம்பதி கைது
2013ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அந்தேரியில் உள்ள முனிசிபல் பள்ளிக்கு செல்லும் வழியில் பூஜா கவுட் எனும் 7 வயது சிறுமி காணாமல் போனார். இந்நிலையில், பல ஆண்டுகளாக விடாமல் தேடப்பட்டு வந்த அவரைக் கடத்திய எலக்ட்ரீஷியன் ஹாரி டிசோசா மற்றும் அவரது மனைவி சோனி இருவரையும் மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
தற்போது 16 வயதை எட்டியுள்ள இப்பெண்ணை ஜூஹு கல்லி பகுதியில் வசிக்கும் அவரது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் முன்னதாக மும்பை காவல் துறையினர் சேர்த்து வைத்தனர்.
பணி ஓய்வுக்குப் பிறகும் தேடிய காவல் ஆய்வாளர்
டிஎன் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத வழக்காக இவ்வழக்கு விளங்கி வந்த நிலையில், அங்கு பணியாற்றி வந்த உதவி காவல் ஆய்வாளர் ராஜேந்திர போசலே (வயது 66) 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
ஆனால் இவ்வழக்கு குறித்து தன் பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து யோசித்து வந்த ராஜேந்திர போசலே தொடர்ந்து தான் மும்பையைச் சுற்றி பயணிக்கும்போதெல்லாம் சிறுமியின் புகைப்படத்தை எடுத்துச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
வீட்டு வேலை செய்ய வைத்த தம்பதி
கடந்த ஆண்டு பூஜாவின் தந்தை மற்றும் தாத்தா, பாட்டி உயிரிழந்த நிலையில், குழந்தை இல்லாத தம்பதியால் சிறுமி கடத்தப்பட்டதாக உள்ளூர்வாசிகள் அளித்த தகவலைக் கொண்டு காவல் துறையினர் தொடர்ந்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் சில காலம் கழித்து தங்களுக்கு குழந்தை பிறந்ததும், பூஜாவை இத்தம்பதி பல இடங்களில் வீட்டு வேலை செய்ய வைத்து சம்பாதித்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் முன்னதாக் பூஜா தொலைந்து போனது குறித்து நினைவுகூர்ந்த அவரது சகோதரர் ரோஹித், "எனக்கு அவள் பள்ளி சீருடையில் இருந்தது நினைவிருக்கிறது. அவள் முனிசிபல் பள்ளிக்கு அருகில் ஒரு கட்டை மீது அமர்ந்து கொண்டு உடன் வர மறுத்துவிட்டாள். நான் 10 அடி முன் நடந்துசென்ற நிலையில், பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமானதால், அவளை வரச் சொல்லிவிட்டு முன் சென்று விட்டேன்.
பள்ளிக்கு அருகே கடத்தல்
டி.என்.நகர் மூத்த ஆய்வாளர் மிலிந்த் குர்டே கூறுகையில் ”கடத்தல்காரர்கள் ஹாரி டிசோசாவும் அவரது மனைவி சோனியும் அவளை பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் கடத்திச் சென்றுள்ளனர். ஐஸ் வாங்கித் தருவதாக உறுதியளித்து டிசோசா அழைத்துச் சென்ற நிலையில், தங்களுக்கு குழந்தை இல்லாததால் அவரது பெயரை ஆனி என மாற்றினர்.
எனினும் அவரை வீட்டு வேலை செய்ய வைத்து வந்த டிசோசா தம்பதி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு குழந்தை பிறந்ததும் அவளை வேறு இடங்களில் வேலைக்காரியாக வேலை செய்ய வைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பூஜாவைத் தாக்கியும் அவரது சம்பளத்தை பிடுங்கிக் கொண்டும் கொடுமைப்படுத்தியும் வந்த நிலையில், அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பதை என்பதை பூஜா உணர்ந்ததாகவும் மிலிந்த் குர்டே தெரிவித்துள்ளார்.
தாய் மகிழ்ச்சி
கடலை விற்று வேலை செய்துவரும் பூஜாவின் தாய் பூனம் பூஜாவை இனி தான் பார்ப்பேன் என்ற நம்பிக்கையை இழந்திருந்ததாகவும், பூஜா மீண்டும் கிடைத்ததில் அவரது வீட்டினர் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் பூஜாவைப் பார்க்க முடியாமல் துக்கத்தில் உயிரிழந்த அவரது தாத்தா, பாட்டி மற்றும் பூஜா காணாமல்போன கவலையில் மன அழுத்தத்துக்குச் சென்ற அவளுடைய தந்தை சந்தோஷும் தற்போது இல்லாதது கவலையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடத்தப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சிறுமியை மீண்டும் அவரது குடும்பத்தினருடன் இணைக்க டிஎன் நகர் காவல் குழு மேற்கொண்ட இந்த வெற்றிகரமான முயற்சிக்கு மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கர் பாராட்டு தெரிவித்தார்.