அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் சீர்காழி காவலர்கள்! கண் பார்வையற்றவரின் பரபரப்பு வீடியோ!
கண்பார்வை அற்ற மாற்று திறனாளியை தாக்கியதாக சீர்காழி காவலர் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இத்தலத்தில் திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் தீமிதி விழாவில் பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தீமிதி திருவிழா அவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வை செய்திட கோயில் நிர்வாகிகள் முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பணி பணிகளை மேற்கொண்டு நிறைவு செய்து. அதனை தொடர்ந்து கடந்த மாதம் ஏப்ரல் 29 ம் தேதி காலை தருமபுரம் ஆதினம் இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள சீர்காழி அருகே உள்ள திருவாலி கிராமத்தை சேர்ந்த கண்பார்வை அற்ற சரவணன் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது கும்பாபிஷேக விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சீர்காழி காவல்நிலைய காவலர் ஒருவர் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதாக தன்னை கண்பார்வை அற்றவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சரவணன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சீர்காழி காவல் நிலையத்தில் உள்ளேயே காவலரை மிரட்டிய வீடியோ, சீர்காழி காவலரை போனில் மிரட்டிய ஆடியோ, சாராய விற்பனைக்கு காவலர்கள் துணை போவதாக வெளியாக வீடியோ என பல்வேறு பதிவுகள் சீர்காழி காவல்நிலையம் பற்றி தொடர்ந்து வெளிவந்து கொண்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் கண்பார்வை அற்ற மாற்று திறனாளி தாக்கியதாக பரவும் வீடியோ சீர்காழி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீர்காழி காவல் நிலையம் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளின் அடிப்படையில் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.