திண்டுக்கல்: பைனான்சியர் குபேந்திரன் கொலை! 3 நாட்களில் கைது, பரபரப்பு விசாரணை!
கடந்த 18ஆம் தேதி கொலை நடந்த நிலையில் மூன்றே நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல், பழனி பைபாஸ் ராமையன்பட்டி பிரிவு அருகே கடந்த வாரம் தரைபாலத்திற்கு அடியில் ஒரு அட்டைப்பெட்டி மர்மமான முறையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுக்கா போலீஸார் அட்டைப் பெட்டியை பிரித்துப் பார்த்தபோது அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் சிறு சிறு காயங்கள் இருந்துள்ளது.
இது தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் அப்பகுதியில் தடயங்களை சேகரித்தனர். இறந்த நபரை வேறு இடத்தில் கொலை செய்து சம்பவ இடத்தில் கொண்டு வீசி சென்று இருக்கலாம் என்று காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இறந்த ஆணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் இறப்பிற்கான காரணம் ? அவர் கொலை செய்யப்பட்டிருந்தால் கொலையாளிகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் வ.உ.சி காலனியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 58) என்பதும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புறநகர் காவல்துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, அங்கமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை செய்யப்பட்ட குபேந்திரன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட N.S.நகர், முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் கண்ணன்(54), கோபால்பட்டி, V. குரும்பபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி சாந்தி(59), திருப்பூர், அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் மனைவி பிரியா(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இவர்கள் மூவரும் குபேந்திரனை தள்ளி விட்டதாகவும் அதில் குபேந்திரன் கீழே விழுந்து இறந்து விட்டதால் அவரை அட்டைப்பெட்டியில் வைத்து ராமையன்பட்டி, தரைப்பாலம் அருகே வீசி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் கொலைக்கு பயன்படுத்திய டாட்டா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 18ஆம் தேதி கொலை நடந்த நிலையில் மூன்றே நாட்களில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், திண்டுக்கல்லில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.





















