Savukku Shankar : பெண் காவலர்களை இழிவாக பேசிய சங்கர்? பெண் காவலர்களை வைத்தே சவுக்கை சுழற்றும் காவல்துறை!
"காவல்துறையில் பெண் காவலர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் அவர்களின் பணியையும் வெளிக்காட்டும் விதத்தில் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை எடுத்துள்ளது”
பிரபல யூடுபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டர். பின்னர், திருச்சி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது தொடர்ச்சியாக வழக்கு பதியப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
பெண் காவலர்களை வைத்தே பாடம் புகட்டும் தமிழ்நாடு காவல்துறை
இந்நிலையில், பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கூறப்படும் சவுக்கு சங்கருக்கு பெண் காவலர்களை வைத்தே தமிழ்நாடு காவல்துறை பாடம் புகட்ட முடிவு செய்தது. அதன் அடிப்படையில், சவுக்கு சங்கரின் நண்பரும் ரெட் பிக்ஸ் யூடுப் நிறுவனருமான பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் சவுக்கை பேட்டி எடுத்ததற்காக வழக்கு பதிவு செய்து, அவரை டெல்லி சென்று திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
பெண் காவலர்களை வைத்தே நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பெலிக்ஸ்
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும்போது ஆண் காவலர்களை தவிர்த்து முழுக்க முழுக்க பெண் காவலர்களை வைத்தே அவரை நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அழைத்து சென்றது. நீதிமன்ற காவலில் பெலிக்சை வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை சிறைக்கும் பெண் காவலர்களே அழைத்துச் சென்றனர்.
பெண் காவலர்களால் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் சவுக்கு
அதே பாணியில், கோவை சிறையில் இருந்து இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சவுக்கு சங்கரை முழுக்க முழுக்க திருச்சி மாவட்ட பெண் காவலர்களே அழைத்து செல்கின்றனர். போலீஸ் வேனில் கடைசி இருக்கையில் அமர வைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு இருபுறமும் பெண் காவலர்களே அமர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டுச் செல்கின்றனர்.
பெண் காவலர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நடவடிக்கை
பெண் காவலர்களை தவறாக பேசியதால், அவர்களின் பணியையும் உழைப்பையும் சவுக்கு சங்கருக்கு உணர்த்தும் வகையிலும், அவருக்கு பாடம் புகட்டும் விதத்திலும் இந்த ஏற்பாட்டை தமிழ்நாடு காவல்துறை செய்துள்ளது. அதேபோல், பெண் காவலர்களை அலட்சியமாக பார்க்கும் மற்றவர்களும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால், பெண் காவலர்களே இந்த வழக்கில் முழுக்க முழுக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சவுக்கு சங்கர் மீதான வழக்கின் பின்னணி
காவல் உயர் அதிகாரி ஒருவரையும் பெண் காவலர்களையும் தொடர்ந்து சவுக்கு சங்கர் இழிவாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு அவரது யூடுயூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த சவுக்கு சங்கர், அந்த நேர்காணலில் பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்ததாகவும் அந்த காவல்துறை உயர் அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை எந்த ஆதாரமும் இன்றி பேசியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்பிறகு, சவுக்கு சங்கர் நடத்தும் யூடுயூப் சேனலில் இருந்து நீதிமன்றமன்ற செய்திகளை வழங்கும் செய்தியாளர் ராஜினமா செய்தார். இவரை மோசடி வழக்கில் அதற்கு முன்னர் காவல்துறை கைது செய்திருந்தது. அடுத்ததாக, அந்த சேனலின் எடிட்டராக இருந்த முத்துலீஃப் என்பரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கிடையில் தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். அப்போது, அவர் காரில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கும் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல்துறையால் பதியப்பட்டது.
பின்னர், திருச்சி மாவட்டத்தில் ஏ.எஸ்.பி.யாக இருக்கும் யாஸ்மின் என்ற பெண் போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரின்பேரிலும் சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் தனியாக இன்னொரு வழக்கை பதிவு செய்து, அவரை சிறையில் இருக்கும்போதே கைது செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து திருச்சி அழைத்துவரும்போதுதான், முழுக்க முழுக்க பெண் போலீசாரே அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் கஸ்டடி கேட்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.