Crime: குடும்ப பிரச்னை காரணமாக போரூர் ஏரியில் மகனை வீசிச்சென்ற தந்தை - போலீசார் விசாரணை!
சென்னை போரூர் அருகே அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்பரம் - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் போரூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீனவர்கள் வழக்கம்போல நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
சென்னையில் குடும்ப பிரச்சினை காரணமாக 3 வயது மகனை ஏரியில் தந்தை வீசி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பிரச்சினை இல்லாத குடும்பங்கள் கிடையாது. அதேசமயம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து விபரீத முடிவுகளை தேடுவது, குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்வது, குடும்பத்தில் பெரியவர்கள் செய்த தப்புக்கு குழந்தைகளை தண்டிப்பது போன்ற முடிவுகளை எடுப்பது என்பது சரியானதும் அல்ல. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு உண்டாக்கியும் பிரச்சினைகள் குறைந்த பாடில்லை.
இப்படியான நிலையில் சென்னை போரூர் அருகே அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாம்பரம் - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலையில் போரூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீனவர்கள் வழக்கம்போல நேற்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஏரியின் மேல் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னுடன் வந்த சிறுவனை ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக நீந்தி சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவனை மீட்டனர். உடனடியாக போரூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவனை மீட்டு விசாரணை நடத்தியதில், 3 வயதான அச்சிறுவன் தலைமை செயலக காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது மகன் என தெரிய வந்தது. அவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபத்துடன் இருந்துள்ளார். மனைவியை வீட்டில் வைத்து பூட்டி விட்டு மகனை போரூர் ஏரியில் வீசி சென்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தவறான முடிவுகள் என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)