Rowdy Neeravi Murugan : தமிழ்நாடு முதல் குஜராத் வரை தேடப்பட்ட குற்றவாளி! யார் இந்த நீராவி முருகன்!
தமிழ்நாடு முதல் குஜராத் வரை பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகனை போலீசார் இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவற்றில் தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.சி.அருணாவை கடந்த 2011-ல் கொலை செய்த வழக்கு முக்கியமானது.
தனது 12 வயது முதலே குற்றச் செயல்களில் நீராவி முருகன் ஈடுபட்டு வந்துள்ளார். நீராவி முருகன் சிறு வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் குடும்பத்தினர் அவரை விலக்கி வைத்ததன் காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்து ரவுடி கும்பலோடு வாழ்ந்து வந்தார். தமிழகம் முழுவதும் நீராவி முருகன் மீது 80 வழக்குகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 வழக்குகள் உள்ளன. பல முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தேடப்பட்டு வந்தவர்.
ரவுடியான கதை :
நீராவி முருகனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர். அங்குள்ள நீராவி தெருவில் அவர் வசித்து வந்ததால் தனது பெயருடன் நீராவியை சேர்த்துக் கொண்டார். கடந்த 1970, 1980-களில் தூத்துக்குடியில் கள்ளச்சாராய தொழில் கொடிக் கட்டி பறந்தது. கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த இரு கும்பல்களின் மோதல்கள் மூலமாக தனது ரவுடி வாழ்க்கை தொடங்கினார். கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு, ரவுடி கோஷ்டிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு, நீராவி முருகன் 2002 முதல் வழிப்பறி, கொள்ளை, திருட்டு போன்றவற் றில் ஈடுபடத் தொடங்கினார்.
நீராவி முருகனுக்கு தமிழகம் முழு வதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வழிப்பறி கொள்ளையர்களுடன் தொடர்பு உள்ளது. பல மாவட்டங்களுக்கு சென்று கைவரிசை காட்டியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தூத்துக்குடியை சேர்ந்த அசோக் என்ற ரவுடி கோஷ்டியில் சேர்ந்து, தூத்துக்குடி மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஏ.சி.அருணாவை கொலை செய்தார். மேலும், திருப்பூரில் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளி ஒருவரை கொலை செய்தார். இந்த இரு வழக்குகளும் நீராவி முருகன் மீதான முக்கிய வழக்குகள்.
உல்லாச வாழ்க்கை
தூத்துக்குடியில் போலீஸ் நெருக்கடி அதிகரித்ததால் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்தார். கொள்ளையடித்த நகை, பணத்தை கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தார். கொள்ளையடித்த உடனே விதவிதமான ஆடைகள் மற்றும் செல்பேசிகளை வாங்கிக் கொள்வார். விலை உயர்ந்த ஆடைகள், ஷூக்களைத்தான் அணிவார்.
கல்லூரி மாணவர் போல் சென்னையில் வலம் வந்துள்ளார். ஒரே இடத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்க மாட்டார். ஒவ்வொரு முறை நகை பறிப்புக்கு செல்வதற்கு வெவ்வேறு ஆட்களைத்தான் தன்னுடன் அழைத்துச் செல்வார். பழனியில் நடைபெற்ற ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரால் அவர் தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது நெல்லை மாவட்டம் களக்காட்டில் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்