SirKazhi: சாலையின் நடுவில் நடப்பட்ட மின்கம்பம் - மயிலாடுதுறையில் அதிகாரிகள் அலட்சியம்
சீர்காழியில் குடியிருப்பு பகுதியில் பாதையின் நடுவில் மின்கம்பம் நடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீப நாள்களாக ஆங்காங்கே இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை வைத்திருக்கும் போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடப்பட்டது, அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமல் சாலை போடுவது, மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி நடாமல் சாலையில் நடுவில் வைத்து புதிய சாலை அமைப்பது தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு வாய்க்கால் கரை தெருவில் அப்படியான ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
சிமெண்ட் சாலை:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு வாய்க்கால் கரை தெருவில் ஏராளமான ஏழை எளிய அன்றாட கூலி தொழிலாளிகள் குடும்பங்கள் குடிசை கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுநாள் வரை அப்பகுதி செல்ல அரசு சார்பில் முறையான சாலை வசதி ஏதும் ஏற்படுத்தி தரவில்லை.
இந்த சூழலில் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து அப்பகுதியில் நகராட்சி நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி சிமெண்ட் கான்கிரீட் சாலையை அமைக்க அந்த பகுதி வார்டு கவுன்சிலர் முயற்சித்து வருகிறார். ஆனால், நகராட்சி பொறியாளர் அங்கு சென்று பார்த்த போது சாலை அமைக்க இடையூறாக மின்கம்பம் நட்ட நடுவில் உள்ளது எனவும், அதனை அகற்றி பாதையோரம் அமைத்தால்தான் சாலை அமைக்க முடியும் என வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் பாதையின் நடுவில் இடையூராக உள்ள மரத்தினை பாதையின் ஓரம் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடுமாறு அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இருந்த போதிலும் அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு சிறிதும் மதிப்பளிக்கமால் புதியதாக நடப்பட்ட சிமெண்ட் மின் கம்பத்தையும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அவர்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த முடியாத வகையில் நட்டு வைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி வார்டு கவுன்சிலர் சோமு கூறுகையில், இதுபோன்று மரங்கள் நடும்போது மின்வாரிய அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வருவதில்லை, மாறாக மின்கம்பத்தை மின்வாரிய கடைமட்ட ஊழியர்கள் மூலம் நட்டுவிடுகின்றனர். அவர் ஏசி அறையில் இருந்து கொண்டு கள நிலவரம் அறியாமல் ஏழை எளிய பொதுமக்களின் வலியை உணராமல் பணி செய்வதை நிறுத்த வேண்டும் என்றார். மேலும் இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தான் ஊரில் இல்லை என்றும் வந்தவுடன் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிகாரிகள் மின்கம்பம் நடும் முன் அங்கு கள ஆய்வு மேற்கொள்ளவில்லை என்பது ஊர்ஜிதம் ஆகிறது.