Crime: கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் 3 மடங்கு லாபம் - லட்சக்கணக்கில் மோசடி
ஆன்லைன் கம்பெனி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் 3 மடங்கு இலாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பல கோடி மோசடி. மதுரையைச் சேர்ந்த நிறுவன பங்குதாரர் தனியரசு என்பவர் கைது.
வத்தலக்குண்டு பகுதிகளில் பிரைட்வே என்ற ஆன்லைன் கம்பெனி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் 3 மடங்கு இலாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த நிறுவன பங்குதாரர் தனியரசு என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பிரைட்வே கம்பெனியின் தலைமை நிர்வாகி பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக பிரைட்வே என்ற பெயரில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட முகவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த முகவர்கள் ஆன்லைன் மார்க்கெட்டில், தாங்கள் செலுத்தும் பணத்திற்கு, மூன்று மடங்கு கூடுதலாக பணம் பெற்று தருவதாக கூறி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து பிரைட்வே என்ற பெயரில் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர்.
முதல் 10 மாதங்கள் முதலீடு செய்த பணத்திற்கு 100 நாட்களில் 3 மடங்கு இலாபம் வந்துள்ளது. இதனால் முதலீட்டாளருக்கு நம்பிக்கை ஏற்பட்டதால் லட்சக்கணக்கில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால் கடந்த 5 மாதங்களாக முதலீடு செய்த பணத்திற்கு எந்தவித லாபமும் வராததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தனர். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் வத்தலக்குண்டைச் சேர்ந்த சென்றாயன் என்பவர் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் நேற்று இரவு மதுரை அருகே, பொதும்பூ என்ற ஊரைச் சேர்ந்த பங்குதாரர் தனியரசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆன்லைன் மார்க்கெட்டில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தினால், 100 நாளில் மூன்று லட்சம் திரும்ப தரப்படும் என முகவர் தனியரசு கூறி வந்துள்ளார். அதேபோல் 10 லட்சம் செலுத்துபவர்களுக்கு, 100 நாளில் 30 லட்சம் திரும்ப கிடைக்கும் என, போலியான கவர்ச்சியான விளம்பரத்தை செய்துள்ளார். இதனை நம்பி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் முகவர்கள் முலம் 100க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.
வத்தலக்குண்டைச் சேர்ந்த சென்ராயன் என்பவர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மார்க்கெட்டில் ரூ.30 லட்சம் செலுத்தி உள்ளார். இந்நிலையில், 100 நாட்களுக்கு மேலாகியும் அந்த தொகை மூன்று மடங்காக சென்ராயனுக்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் சென்றாயன் புகார் செய்த நிலையில், இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த, நிலக்கோட்டை போலீசார் சார்பு ஆய்வாளர் தயாநிதி தலைமையில் தனிப்படை அமைத்து, ஆன்லைன் மார்க்கெட்டில் கரன்சி பெற்றுத் தருவதாக, சென்றாயனை ஏமாற்றிய பிரைட்வே கம்பெனியின் பங்குதாரர் தனியரசனை கைது செய்துள்ளனர்.
மேலும், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதே போன்று எத்தனை பேரிடம் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்கள் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் இன்னும் கம்பெனியின் பங்குதாரர்கள் யார் யார் என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்