ஆரணியில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு - அதிர்ச்சி வீடியோ
கடந்த இரண்டு மாதத்தில் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியலை உடைத்து திருடும் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவில் கோயில்களின் உண்டியல்களை உடைத்து மர்ம கும்பல் ஒன்று பணம் திருடி வருகின்றது. ஆரணி அருகே லட்சுமி நகர் முத்துமாரியம்மன் கோயில், வி.ஏ.க நகர் விநாயகர் கோயில், ஆரணி பாளையம் விநாயகர் கோயில் என 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் நள்ளிரவில் உண்டியல்களை உடைத்து தொடர்ச்சியாக மர்ம நபர்கள் பணம் திருடி வருகின்றனர். இந்த சம்பவம் கோயில்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி பதிவை வைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தொடர்ச்சியாக தேடி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க முடியாததால் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்தில் 10-க்கும்
— Vinoth (@Vinoth05503970) January 2, 2023
மேற்பட்ட கோவில்களில் உண்டியலை உடைத்து திருடும் மர்ம கும்பலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறல்.@SRajaJourno @abpnadu @TVMalaiPolice @drkarthik_ips pic.twitter.com/JTNJ0sbmYt
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கண்ணில் மிளகாய் பொடி தூவியது போல் ஆரணி நகர மையப்பகுதியில் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மாரியம்மன் கோயிலில் சிவாச்சாரியாராக கிருஷ்ணமூர்த்தி இரவு கோயிலை மூடிவிட்டு சென்றார். மீண்டும் காலையில் வழக்கம் போல் கோயிலை திறக்க சென்றார். கிருஷ்ணமூர்த்தி கோயிலை திறந்துள்ளார். அப்போது கோயிலில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை உண்டியல் உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்த நிர்வாகிகள் வந்து பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை பார்த்துள்ளனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் வந்து அதில் ஒருவர் இரும்பு ராடால் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை லுங்கியில் பிடித்து லாவகமாக திருடி சென்றனர். இந்த காட்சி மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி பதிவை பார்த்து கோயிலின் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆரணி நகர மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் ஆரணி காவல் துறையினர் திணறி வருகின்றனர்.