Delhi Crime : காரில் 12 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்ட டெல்லி பெண்... பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்...!
டெல்லியில் கார் மோதியதில் 12 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் 20 வயது இளம்பெண் பலியாகியுள்ளாதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
பெண் உயிரிழப்பு
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை கார் மீது மோதியதில் 12 கிலோமீட்டர் தூரம் வாகனத்தின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார். மாருதி சுசுகி பலேனோ காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கிரெடிட் கார்டு சேகரிப்பு முகவர், ஓட்டுநர் மற்றும் ரேஷன் கடை உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.
பிரேத பரிசோதனை அறிக்கை
இந்நிலையில் பெண்ணின் உடலை மருத்துவர்கள் நேற்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ” பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் எந்த காயமும் இல்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை" எனவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
அந்த பெண்ணின் மரணத்திற்கான காரணமானது, அவரது தலை, முதுகுத்தண்டு, இடது தொடை எலும்பு மற்றும் கீழ் முட்டுகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ரத்தக் கசிவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ரசாயண பரிசோதனை மற்றும உயிரியல் பரிசோதனை முடிவுகள் வந்த பின்பு தான் அஞ்சலி சிங் விவகாரத்தில் இறுதி முடிவுக்கு வர முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தோழி பரபரப்பு பேட்டி
இதற்கிடையே உயிரிந்த அந்த பெண்ணின் தோழி நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” எனக்கு அஞ்சலியை 15 நாட்களாக தான் தெரியும். ஆனால் இந்த குறுகிய காலத்தில் நாங்கள் நெருங்கி பழகிவிட்டோம். இதை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டலுக்கு சென்றோம். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 2 மணிக்கு நாங்கள் ஓட்டலில் இருந்து வெளியேறினோம். அப்போது, நாங்கள் லாரி விபத்தில் ஒன்றில் நூலிழையில் உயிர் தப்பினோம். நான் வண்டியை நிறுத்த வேண்டும் எனக் கூறினேன். ஆனால் அவள், வண்டியை மெதுவாக ஓட்டுகிறேன் என கூறினாள்” என்றார்.
அதைத் தொடர்ந்து, "இருசக்கர வாகனத்தில் கார் மோதியது. நாங்கள் இருவரும் அலறினோம். எங்கள் சத்தத்தை காரில் இருந்தவர்கள் கேட்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தவில்லை. அவர்கள் இந்த விபத்தினை வேண்டுமென்றே ஏற்படுத்தியதாக தெரிகிறது” எனக் அவரது தோழி கூறினார்.