Cyber crime: டெலிகிராம் மூலம் பார்ட் டைம் ஜாப் மெசேஜ் அனுப்பி ரூ.46 லட்சம் மோசடி- உஷாரா இருங்க மக்களே..?
முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம்
தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரைச் சேர்ந்த மாக்கன் மகன் தங்கதுரை (52). இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை தேவையா? என்ற விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணில் பேசியுள்ளார்.
அப்போது அந்த நபர், பிரபலமான டிராவல் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, அந்த நிறுவனத்துக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் தருவதாகவும் தங்கதுரையிடம் கூறியுள்ளார். முதலில் ரூ.1,100, ரூ.1,500 என லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்துள்ளனர்.பின்னர் அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் இலக்கீட்டை பூர்த்தி செய்யும்படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர். தங்கதுரை அவர்கள் கூறிய வலைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு, பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45,91,054 பணத்தை செலுத்தியுள்ளார்.
ஆனால், எந்த வருமானமும் கிடைக்கவில்லை. தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தங்கதுரை, தேசிய சைபர் குற்ற தடுப்பு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். புகார் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.தங்கதுரையிடம் பணம்மோசடி செய்தவர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகேயுள்ள குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம் குமார் (31) என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், ஒருசெல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏடிஎம் கார்டுகள் மற்றும்பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை தூத்துக்குடிநான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.எலியாஸ் பிரேம் குமார் மேலும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் வங்கிகளில் 21 வங்கி கணக்குகளை தொடங்கி, அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ. 25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இதுபோன்று பல்வேறு Like and Review Scam சைபர் குற்றங்கள் Telegram மற்றும் Whatsapp மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இதனால் Like and Review Scam சம்மந்தமாக உங்களை முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு Youtube Review, movie Review, Location Review இதுபோன்று கூறினால் அவர்களை நம்பி பணத்தை முதலீடு செய்து மோசடி செய்பவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.