Crime : லிவ் இன் ரிலேஷன்ஷிப் டூ கல்யாணம்: மனைவியை 50 துண்டுகளாக வெட்டிய கணவர்... என்ன நடந்தது...?
ஜார்க்கண்டில், 22 வயது பழங்குடியின பெண்ணை கொலை செய்து, 50 துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் 22 வயது பழங்குடியின பெண்ணை கொலை செய்து, 50 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்த தில்தார் அன்சாரி, ரூபிகா பஹாதின் தம்பதி. இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்தனர். 22 வயதான ரூபிகா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த இரண்டு ஆண்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ரூபிகாவை, கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார் தில்தார் அன்சாரி.
இதனை அடுத்து, ரூபிகாவை காணவில்லை என, கணவர் அன்சாரி போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சாஹேப் கஞ்ச் பகுதியில் உள்ள கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தின் பின்புறம் மனித கால் மற்றும் சில உடல் உறுப்புகள் கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பாகங்களை கைப்பற்றிய போலீசார், அது காணாமல் போன பெண் ரூபிகாவுடையாதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
அவரது கணவர் தில்தார் அன்சாரியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். மனைவியின் உடலை 50 துண்டுகளாக வெட்டி, அதை பல்வேறு இடங்களில் வீசியதாக தெரிவித்தார். 18 உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மீதி பாகங்களை தேடி வருகின்றனர். இந்த கொலையில், அன்சாரியுடன் வேறு சிலரும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்தடுத்து கொடூரம்
இதைபேன்று அடுத்தடுத்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார்.
வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி வெட்டப்பட்ட உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்கள் மற்றும் சிறுமிகள் குறிவைத்து கொல்லப்படும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐநா வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் 87,000 பெண்கள்/சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 137 பெண்கள்/சிறுமிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில், காதலரால் மட்டும் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை 30,000 ஆக பதிவாகியுள்ளது. அதாவது, கொல்லப்படும் பெண்களில் மூன்றில் ஒருவர், காதலரால் கொல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.