Crime: மீன் வலையில் சிக்கிய ஆட்டை காப்பாற்ற முயற்சித்த 2 பேர் உயிரிழந்த சோகம்
திருவண்ணாமலை அருகே சட்டவிரோதமாக ஏரியில் மீன்பிடிப்பதற்காக வலையில் சிக்கிய ஆட்டை காப்பாற்ற முயற்சித்த இருவர் உயிரிழந்தனர். வலையை விரித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கருத்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அதே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அருண், சிவதாஸ் மற்றும் சங்கர் ஆகிய 3 நபர்களும் சேர்ந்து ஏரி கரையில் வீடு கட்டிக்கொண்டு சட்டவிரோதமாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து நேற்று பிற்பகல் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதற்காக ஏரியில் மீன் வலையை கிழக்கு மேற்காக விரித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வயது (35) ஆடுகளை வளர்த்து வருகிறார். திருவேங்கடம் காலையில் ஆடுகளை மேய்ப்பதற்கு ஏரிகரை பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஒரு ஆடு காரையில் மேய்ந்து கொண்டு இருந்து தண்ணீரில் இறங்கியது. அப்போது மீனிற்கு விரிக்கப்பட்ட வலையில் ஆடு சிக்கிக் கொண்டுள்ளது. இதனை அறிந்த திருவேங்கடம் தனது ஆட்டை காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கி மீன் வலையிலிருந்து ஆட்டை காப்பாற்ற முயற்சி செய்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக திருவேங்கடமும் மீன் வலையில் சிக்கிக் கொண்டார். வலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்துள்ளார். ஆனால் திருவேங்கடத்தால் வரமுடியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக திருவேங்கடம் நீரில் முழுகியுள்ளார். அவர் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டுள்ளார். அப்போது ஏரிக்கு அருகாமையில் செங்கல் சூலையில் பணி செய்திருந்த ரமேஷ் கூச்சல் சத்தத்தை கேட்டு உடனடியாக ஏறி பகுதிக்கு விரைந்து சென்றார். அப்பொழுது திருவேங்கடம் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து திருவேங்கடத்தை காப்பாற்றுவதற்காக ரமேஷ் ஏரியில் இறங்கி முயற்சிக்கும்போது காப்பாற்றச் சென்ற ரமேஷும் வலையில் சிக்கியுள்ளார். பின்னர் ரமேஷூம் திருவேங்கடமும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் ஏரியில் இறங்கி உடலை மீட்பதற்கு தேடினர்.பல மணி நேரம் தேடிய பிறகு நேற்று இரவு திருவேங்கடத்தின் உடலை மட்டும் கைப்பற்றினர். பின்னர் இன்று அதிகாலையில் செங்கல் சூளை கூலித் தொழிலாளி ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய காவல்துறையினர். சட்ட விரோதமாக மீன் வலையை விரித்த மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேச்சலுக்குச் சென்ற ஆடு மீன் வலையில் சிக்கியதை காப்பாற்ற முயன்ற இருவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.