Crime: ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் துணிகர கொள்ளை; நெல்லையில் மர்ம நபர்கள் கைவரிசை..!
போபாலில் படிக்கும் தனது மகன் பட்டமளிப்பு விழாவிற்காக கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் புறப்பட்டு சென்று உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் நேற்று அதிகாலை வீடு திரும்பி உள்ளார்
நெல்லை அடுத்த பேட்டை காந்திநகரில் உள்ள ஷேக்மதார் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியன்(வயது 60). இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு வேல்பார்த்திபன், கல்யாணகுமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். சுப்பிரமணியன் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் மத்தியபிரதேசம் தலைநகர் போபாலில் உள்ள கல்லூரியில் தனது மகன் படித்து வரும் நிலையில் அவரின் பட்டமளிப்பு விழாவிற்காக கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் புறப்பட்டு சென்று உள்ளார். பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில் நேற்று அதிகாலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான 20 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனடியாக இதுகுறித்து பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கதவு, பீரோ உள்ளிட்டவற்றில் பதிவான கை ரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் அந்த பகுதியை சுற்றி உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்...