Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது
தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை தொடர்பாக 3 நபர்களை கைது செய்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த பறையம்பட்டு சாலையை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 47) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுவிட்டார். பூமிநாதன் மனைவி செல்வி (வயது 40) வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து வாணாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்
செய்யாறு அருகே உள்ள மோரணம் காவல் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கைரேகையும் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவரின் கைரேகையும் ஒத்து போனதையடுத்து அவர்களின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை சாலையில் ஆய்வாளர் செல்வநாயகம் துணை ஆய்வாளர் பிரசாந்த், சரவணன் , அம்பிகா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் விசாரணை செய்ததில் திருவண்ணாமலை பகுதியில்லிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என்கிற சசிகுமார் (வயது 46) மற்றும் சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்க மகன் மாட்டு ரமேஷ் (வயது 55)
திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் பாஸ்கரன் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் ராணுவ வீரரின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 19 பவுன் தங்க நகை 100 கிராம் வெள்ளி ஒரு இரண்டு சக்கர வாகனம் இரும்பு ராடு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சசிகுமார், மாட்டு ரமேஷ், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் மீது சென்னை, பூந்தமல்லி, திருவண்ணாமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பதும் இதில் சசிகுமார் மீது 13 வழக்குகளும் மாட்டு ரமேஷ் மீது 40 வழக்குகளும் பாஸ்கரன் மீது 3 வழக்குகளும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.