crime: ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது - கொள்ளைக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை தனிப்படையினர் கைது செய்து கண்டனர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் தண்டராம்பட்டு சாலையில் ஒரு ஏ.டி.எம். மையம் , மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு ஏ.டி.எம் போளூரில் ஒரு ஏ.டி.எம், கலசபாக்கத்தில் ஒரு ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் இயந்திரத்தின் மூலம் வெட்டி எடுத்து அதில் இருந்த ரூபாய் 72 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி தலைமையிலான 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், இவர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் தனிப்படை காவல்துறையினர் சிசிடிவி கேமரா உதவியுடன் கர்நாடகா, அரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் , 2 கார்களை பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளை ஆரிப், ஆஜாத் ஆகிய இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஏ.டி.எம். கொள்ளையில் மூளையாக செயல்பட்டவரையும் காவல்துறையினர் சென்னையில் கைது சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், திஜாரா தாலுகா ஜவாந்திகுர்த் கிராமத்தை சேர்ந்த சிராஜுதின் வயது (50) என்பவரை கர்நாடகா மாநில எல்லை அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணத்தை கடத்தி செல்ல பயன்படுத்திய கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள சிராஜுதினிடம் விசாரணை நடத்தினால் தான் கொள்ளையடித்த பணத்தை எங்கு பதுக்கி வைத்து உள்ளனர் என்ற தகவல் வெளியே வரும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.