Crime: வீட்டில் ரகசிய அறையில் சாராயம் பதுக்கல் - பிரபல சாராய வியாபாரி கைது
திருவண்ணாமலை அருகே பிரபல சாராய வியாபாரியிடம் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 125 கேன் எரி சாராயத்தை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை சாராய வியாபாரி. திருவண்ணாமலை மாவட்டம் களஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இருவரும் பிரபலமான சாராய வியாபாரிகள். இந்நிலையில் பூதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் புதுச்சேரியில் இருந்து மோகன்தாஸிற்கு சாராய கேன்களை அடிக்கடி வாங்கி வந்து இருவரும் கூட்டுச் சேர்ந்து விற்பனை செய்து வந்தனர். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜிற்கு கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 8 பேர் அடங்கிய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கலஸ்தம்பாடி கிராமத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் ஒரு மணி நேரம் ஈடுபட்ட பொழுது அவர்கள் வீட்டில் ஒரு இடத்தில் கூட சாராய கேன் இல்லாமல் இருந்துள்ளது. அதன் பிறகு மீண்டும் காவல்துறையினர் முயற்சித்த பொழுது வீட்டின் பூஜை அறை மற்றும் குளியல் அறையில் ரகசிய அறையை வைத்து அதற்குள் பல கேன்கள் இருப்பதை விசாரணையில் அறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மீண்டும் அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு பின்புறம் ஒரு ரகசிய அறையும் குளியல் அறையில் இருந்த பெரிய கண்ணாடிக்கு பின்புறம் ஒரு ரகசிய அறையையும் கண்டறிந்து அவற்றிற்குள் பதுக்கி வைத்திருந்த 125 எரி சாராய கேன்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மோகன் தாஸை போலீசார் கைது செய்தனர். மேலும் புதுச்சேரியில் இருந்து மோகன்தாஸிற்கு சாராயம் வாங்கிக் கொடுத்த ஏழுமலை தப்பிச் சென்றதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக ரகசிய அறைகள் தனது வீட்டிற்குள்ளேயே அமைத்து எரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களை சந்தித்த திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்..,
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறை காவலர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டு மட்டும் மதுவிலக்கு பிரிவில் 1700 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 1200 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியவர் கடந்த 3 மாதத்தில் கள்ளச்சாராய ஊரல் 87 ஆயிரம் லிட்டரும், சாராயம் 20 ஆயிரம் லிட்டரும் கண்டுபிடிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியவர். கடந்த ஆண்டில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் வழக்கில் 35 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இந்த ஆண்டு 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியவர் சாராயம் விற்பவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த கால்நடைகளை கொடுத்தால் மட்டும் போதாது என்றும் அவர்கள் தேவையறிந்து காலத்திற்கு ஏற்றார் போல் மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தனது நோக்கம் என்றும் கூறினார்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.