Crime: கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய பாதிரியார் மகன்; பாதிரியார் உட்பட 4 பேருக்கு வலைவீச்சு
”நம் காதல் விவகாரம் வெளியே தெரிய வந்தால் தனக்கும், குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த சபைக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும் தன்னை விட்டு 2 வருடத்திற்கு விலகி இருக்குமாறும் கூறியுள்ளார் காதலன் அனிஸ் பவுல்”
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை சியோன்புரத்தை சேர்ந்தவர் டேவிட் ஜேக்கப் ராஜ், இவர் கலந்தபனையில் உள்ள பெந்தேகோஸ்தே சபை ஒன்றியில் பாதிரியராக இருந்து வருகிறார். இவரது மகன் அனிஸ் பவுல் (25). இவர் பெந்தேகோஸ்தே சபைக்கு வரும் போது அங்கு வந்த வடலிவிளையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்பெண் கல்லூரியில் எம்சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவரின் நட்பும் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து பல இடங்களில் சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அனிஸ் பவுல் அந்த பெண்ணிடம் இருந்து விலகியதாக தெரிகிறது. நம்முடைய காதல் விவகாரம் வெளியே தெரிய வந்தால் தனக்கும், குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த சபைக்கும் அவப்பெயர் ஏற்படும் என்றும் தன்னை விட்டு இரண்டு வருடத்திற்கு விலகி இருக்குமாறும் அதன்பின் பார்த்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி தன்னை காதலித்து ஏமாற்றிய அனிஸ் பவுலிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனிஸ் பவுல் தான் காதலித்த பெண் குறித்து தவறாக தன்னுடைய பெரியப்பா ஞானமணியின் மகன் பிரின்ஸ் என்பவரிடமும், தனது நண்பர்கள் வட்டாரத்திலும் கூறியுள்ளார், மேலும் காதல் விவகாரம் குறித்து டேவிட் ஜேக்கப் ராஜ், அவரது சகோதரர் ஞானமணி, அவரது மகன் பிரின்ஸ் ஆகியோருக்கு தெரியவர அவர்கள் அந்த பெண்ணை அனிஸிடம் இருந்து விலகி இருக்குமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஞானமணியின் மகன் பிரின்ஸ் என்பவர் கல்லூரி மாணவியான அந்த இளம்பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இளம்பெண் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய அனிஸ் பவுல் மற்றும் அவரது தந்தை டேவிட் ஜேக்கப் ராஜ், அவரது சகோதரர் ஞானமணி, மற்றும் ஞானமணியின் மகன் பிரின்ஸ் ஆகியோர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அனிஸ் பவுல் அவரது சகோதரர் பிரின்ஸ் உட்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பாதிரியார் டேவிட் ஜேக்கப் ராஜ் அவரது மகன் அனிஸ் பவுல் உட்பட 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த இளம் பெண்ணுக்கு ஆசை வார்த்தை கூறி காதலித்து பின் ஏமாற்றிய ஆடியோ மற்றும் பிரின்ஸ் என்பவர் செல்போனில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆடியோ அனைத்தும் வைரலாக பரவி வருகிறது. இதனடிப்படையிலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண்ணை காதலித்து கைவிட்டதோடு மற்றவர்கள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து ஏமாற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்