தூக்கத்தால் வந்த துக்கம்! 350 லிட்டர் டீசல் போச்சே - நாட்றம்பள்ளியில் நடந்தது என்ன?
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து 350 லிட்டர் டீசல் திருடப்பட்டச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களின் உதிரி பாகங்களைத் திருடுவதற்கு ஒரு கும்பல் இருப்பது போல, வாகனங்களில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலைத் திருடும் செயல்களில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மேட்டூர் டூ விஜயவாடா சென்ற லாரி:
மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். இவர் லாரி ஓட்டுனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாகனங்களை ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில், உதயகுமார் மேட்டூரில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு விஜயவாடா நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுள்ளார். அப்போது, அவர் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சென்றபோது அவருக்கு தூக்கம் வந்துள்ளது. இதனால், அங்கே இருந்த பெட்ரோல் பங்க் நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு சற்று நேரம் தூங்கியுள்ளார்.
350 லிட்டர் டீசல் திருட்டு:
தூங்கி எழுந்த உதயகுமார் லாரியை மீண்டும் இயக்கியபோது லாரி இயங்கவில்லை. இதனால், உதயகுமார் குழப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து, லாரியில் இருந்து கீழே இறங்கிய உதயகுமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது, லாரியில் இருந்த டீசல் டேங்க் பூட்டு உடைக்கப்பட்டு, டீசல் டேங்க் திறந்து இருந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உதயகுமார் பதற்றத்துடன் சென்று பார்த்தபோது டீசல் டேங்க் முழுவதும் காலியாகி இருந்தது. அப்போதுதான் லாரியில் இருந்த டீசல் முழுவதும் திருடப்பட்டு இருந்ததை அறிந்துள்ளார். இதனால், உதயகுமார் செய்வதறியாமல் திகைத்தார். விஜயவாடா வரை செல்வதற்காக 350 லிட்டர் அதாவது சுமார் 35 ஆயிரத்திற்கு லாரியில் டீசல் நிரப்பப்பட்டு இருந்தது.
நடந்தது என்ன?
இந்த சம்பவத்தால் உதயகுமார் மனம் உடைந்து கண்ணீர்விட்டார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் கூறியதாவது, என் பேரு உதயகுமார். நான் மேட்டூரில் இருந்து சரக்கு ஏத்திகிட்டு விஜயவாடா போயிகிட்டு இருந்தேன். அப்போது, போற வழியில நாட்றாம்பள்ளியில தூக்கம் வருதுனு 2.30 மணிக்கு படுத்து தூங்குனேன். காலையில 6, 6.30 மணிக்கு எந்திரிச்சு பாத்தேன். டீசல் டேங்க்ல டீசலை காணோம். போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் கொடுத்தேன்.
350 லிட்டர், 35 ஆயிரத்திற்கு நான் எப்படி கட்டுவேன். நானே 10 வருஷமா கஷ்டத்துல வண்டி ஓட்டுகிட்டு இருக்கேன். இன்னும் 3 மாசத்துக்கு ஓட்டுனாதான் நான் கொடுக்க முடியும். அதுனால காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காவல்துறை நடவடிக்கை:
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சாலைகளில், சாலையோரங்களில் இவ்வாறு பொருட்கள், டீசல் திருட்டு குறைவாக நடைபெறுகிறது. இந்த செயல்களைத் தடுக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், நாட்றம்பள்ளி அருகே 350 லிட்டர் டீசலை லாரியில் இருந்து திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.