பழனியில் தொடரும் கள்ளச்சாராய விற்பனை : 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை நடந்து வருவதாக போலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வனப்பகுதியில் ரோந்து சென்றனர்
பழனி பகுதிகளில் தொடரும் கள்ளச்சாராயம் விற்பனை.
சட்டவிரோதமாக விற்கும் கள்ளச்சாராயத்தை தொடர்ந்து போலீசார் பறிமுதல் செய்துவருகின்றனர். பழனியில் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவின் பேரில், டிஎஸ்பி சிவா அறிவுறுத்தலின்படி பழனி தாலுகா போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சண்முகம்பாறை வனப்பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன், தாலுகா சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் பழனி வனச்சரக அலுவலர் அமுதரசு உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்றபோது, சிலர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
இதனையடுத்து சாராயம் காய்ச்சிய நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கோகுல் (23), நந்தகுமார் (25), ராஜேந்திரன் (62) ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 120 லிட்டர் சாராயம், 50 லிட்டர் எரிசாராயம் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆத்தூர் எனும் பகுதியில் மளிகை கடையில் வைத்து 200 மில்லி அளவுள்ள கூல்டிரிங்ஸ் பாட்டிலில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அன்னராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பழனி பகுதியில் இது போன்று தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தொடந்து வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது திண்டுக்கல் மாவட்டத்தையொட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக தங்களுக்கும் தொடர்ந்து புகார் வந்துகொண்டுள்ளது எனவும், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை பிடிப்பதற்கு போலிசார் தனிப்படை அமைத்து வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் : பழனி அருகே இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த அரிகண்ட கல் கண்டெடுப்பு..!