Crime: வெளிநாட்டில் வேலை..... மோசடி தம்பதியின் சொத்துக்கள் முடக்கம்
அருண் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று கொண்டு ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
கோவை வடகோவை பகுதியில் இயங்கி வந்த Shea immigration service என்ற நிறுவனம் வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக யூடியூபில் விளம்பரம் செய்து வந்துள்ளது. இதனைப் பார்த்த புலியகுளம் பகுதியை சேர்ந்த ரூபன் ராஜ்குமார் (26) என்ற இளைஞர் அந்த நிறுவனத்தை கடந்த 2021 ம் ஆண்டு நேரில் சென்று அணுகியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அருண் மற்றும் மனைவி ஹேமலதா ஐரோப்பாவில் உள்ள லாத்வியா நாட்டிற்கு செல்ல பிசினஸ் விசா பெற்று தருவதாகவும், அதற்கு 6 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர். மேலும் முன்பணமாக 3 லட்ச ரூபாயை கட்டும்படி கூறியுள்ளனர்.
இதனை அடுத்து மூன்று லட்சம் ரூபாயை ரூபன் ராஜ் செலுத்திய நிலையில், நான்கு மாதத்திற்குள் விசா பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் உறுதியளித்தபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் விசா தயார் செய்து கொடுக்காததால், 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூபன் ராஜ் மீண்டும் அந்நிறுவனத்திற்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது அருண் மற்றும் ஹேமலதா லாத்வியா செல்ல காலதாமதம் ஆகும் எனவும், செக் குடியரசுக்கு செல்வதாக இருந்தால் உடனே ஒர்க் பர்மிட் பெற்றுத் தருவதாகவும், ஆனால் அதற்கு 4.5 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளனர்.
மேலும் ஏற்கனவே மூன்று லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதால் 1.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து ஒரு லட்சம் ரூபாயை ரூபன் ராஜ்குமார் கொடுத்துள்ளார். இருப்பினும் நீண்ட நாட்களாக வொர்க் பர்மீட்டும் பெற்று தராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரூபன் ராஜ்குமார், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தபட்டது. அதுமட்டுமின்றி ஏற்கனவே அருண் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் கோவை மாநகர குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகா தேவி அருணை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அருணின் வாக்குமூலத்தின்படி இவருக்கு சொந்தமான இரண்டு அலுவலகங்கள் மற்றும் வீட்டில் சோதனை செய்து 329 முக்கிய ஆவணங்கள் ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு சிறிய ரக கார் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான ஹேமலதா பெயரில் சிவானந்த காலனி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருந்த 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை முடக்கம் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அருண் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 நபர்களிடம் மோசடியில் ஈடுபட்டு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பெற்று கொண்டு ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில், இருவரிடமும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்