Crime: கடனை திருப்பி கேட்டதால் பெண் கொலை - கோவையில் 2 பேர் கைது
5 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், கடனை செலுத்த முடியாததால், கன்னியப்பன் அவரது நண்பர் சுதாகருடன் சேர்ந்து தங்கமணியை கொலை செய்ய திட்டம் போட்டு கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதுரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (54). இவரது மனைவி தங்கமணி. இவர்களது பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கமணி இதே பகுதியில் வட்டிக்கு பணம் விட்டு வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணி சொந்த வேலையாக வெளியே சென்றுள்ளார். அப்போது தங்கமணி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். சுப்பிரமணி பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் சமையலறையில் கழுத்து அறுபட்ட நிலையில் தங்கமணி சடலமாக கிடந்துள்ளார். மனைவி சடலமாக கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி சத்தம் போட்டு உள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அப்போது கொலையாளிகள் வீட்டில் இருந்து பணம் நகை என எதையும் திருடிச் செல்லவில்லை என்பதும், தடயத்தை மறைக்க உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவியதும் தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான நோக்கம் என்ன? என்பது குறித்து காவல் துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இறந்த பெண்ணின் உறவினரான எல்லைபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்த கன்னியப்பன் (29) மற்றும் அவரது நண்பர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற வேங்கை சுதாகர்(30) ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
பின்னர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், தங்கமணியிடம் கன்னியப்பன் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 லட்ச ரூபாய் கடன் பெற்றதாகவும், கடனை தங்கமணி திருப்பி கேட்கவும், கடனை செலுத்த முடியாததால், கன்னியப்பன் அவரது நண்பர் சுதாகருடன் சேர்ந்து தங்கமணியை கொலை செய்ய திட்டம் போட்டு, தங்கமணியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், இருவரும் சேர்ந்து உளியால் தங்கமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்ததை காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றவாளிகளை 12 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்