எதையுமே விடமாட்டீங்களா... போதை கலந்த ஐஸ்கிரீம் சேல்... கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
Coimbatore: நகரம் படத்தில் நாய்க்கு போதை தர பன்னில் மதுபானம் ஊற்றி, வடிவேலு கொடுக்கும் போது, மறைந்திருந்து பார்க்கும் வில்லன்கள், ‛என்னடா... உனக்கு புதுவித போதை கேட்குதா...’ என்பார்கள்.
போதை... எதில் எல்லாம் கிடைக்குமோ... அதில் எல்லாம் நுழைந்து அதை அனுபவிக்க ஒரு கூட்டம், அதை சப்ளை செய்ய இன்னொரு கூட்டம். இப்படி தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். போதை ஒரு அளவை கடக்கும் போது அது குற்றச்செயலாகிறது. குற்றமாகிறது. குற்றத்தை உருவாக்குகிறது. அதனால் தான் போதை பொருட்கள் மீது அதிக கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும் விதிக்கப்படுகிறது.
ஆனால் என்ன தான் கண்காணிப்பு செய்தாலும், அதில் கண்ணில் மண் தூவி, தடைகளை உடைத்து போதைக்கு தனி பாதை அமைத்து பந்தாவாக நகர்ந்து கொண்டிருக்கிறது போதை மாஃபியா. நகரம் படத்தில் நாய்க்கு போதை தர பன்னில் மதுபானம் ஊற்றி வடிவேலு கொடுக்கும் போது, ஒழிந்திருந்து பார்க்கும் வில்லன்கள், ‛என்னடா... உனக்கு புதுவித போதை கேட்குதா...’ என்பார்கள். இங்கு அப்படி தான் ஒவ்வொரு நாளும் புதுவித போதை வஸ்துகள் புழக்கத்தில் வருகிறது. இப்போது கோவையில் ஐஸ்கிரீமில் போதை பொருட்கள் கலந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க... என்பது தான் இந்த விவகாரத்திற்கு பொருத்தமாக இருக்கும். எங்கு தயாராகிறது போதை ஐஸ்கிரீம்... எப்படி தயாராகிறது போதை ஐஸ்கிரீம்... எப்படி பிடிபட்டது போதை ஐஸ்கிரீம்... இனி என்ன ஆகும் போதை ஐஸ்கிரீம்... இதோ முழு விபரம்:
கோவை லட்சுமி மில் சந்திப்பில், லட்சுமி மில் நிர்வாகத்திற்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் Rolling dough cafe என்ற ஐஸ்கீரிம் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த ஐஸ்கிரீம் கடையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அலுவலகத்திற்கும் புகார்கள் சென்றது.
இதனையடுத்து உயரதிகாரிகளின் உத்திரவின் பேரில் லட்சுமி மில் நிர்வாகத்திற்கு சொந்தமான வணிகவளாகத்தில் தனியாரால் நடத்தப்படும் Rolling dough cafe என்ற ஐஸ்கீரிம் கடையில்
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஐஸ்கீரிம் கடையில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுபானம் கலந்த
ஐஸ்கிரீம் தயாரிப்பதும் அங்கு உறுதி செய்யப் பட்டது.இதனையடுத்து அங்கிருந்த பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்காக சேகரித்தனர். பின்னர் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புகார் வந்தது, பிடித்தது எல்லாம் ஓகே.... இதுவரை இவற்றை பயன்படுத்தி வந்தவர்கள் யார்? ஐஸ்கிரீம் என்பது குழந்தைகள் விருப்பம். அப்படியிருக்க... இது எங்கெல்லாம் விற்கப்பட்டது. என்பது குறித்த விரிவான விசாரணை வேண்டும்.