Salem Temple Issue: சேலத்தில் இரு தரப்பு மோதல் - இதுவரை 19 பேர் கைது
கல்வீச்சு சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இதுவரை 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த திருவிழாவை ஒருத்தரப்பினர் மட்டுமே எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களை மாரியம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என புகார் விழுந்தது. இந்த ஆண்டு நாங்களும் கோவில் திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் மாரியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் இரண்டு மணி அளவில் இரண்டு தரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்காக வட்டாட்சியர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு இயக்கப்படாத நிலையில் இரண்டு தரப்பினர் இடையே அதிகாரிகள் முன்னிலையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கற்களை கொண்டு தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் முற்றிய நிலையில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி, டீக்கடை என 15 கடைகளுக்கும் மேல் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த ஒரு கடைக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. கற்களை வீசியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தீவட்டிப்பட்டி பகுதியில் புவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எங்களுக்கும் இந்த கோவிலில் பங்கு உண்டு, நாங்களும் இந்த ஆண்டு திருவிழாவை எடுத்து நடத்துவோம் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பை ஏற்பட்டது. மேலும் வட்டாட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
பின்னர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரண்டு தரப்பினரிடையே சமரசம் செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்தில் இருந்து குழு அமைக்கப்பட்டு இன்று காலை பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது ஒரு தரப்பினர் கால அவகாசம் கேட்டனர் அதற்கு மற்றொரு தரப்பினரும் ஒற்றுக்கொண்டனர். பேச்சுவார்த்தை முடிந்து திரும்பியபோது ஒரு தரப்பினர் பெண்களுடன் சாலைக்கு வந்து கல்விச்சல் ஈடுபட்டனர். உடனடியாக மற்றொரு தரப்பினரும் இவர்கள் மீது கற்களை எறிய தொடங்கினர். தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளோம். கல்விச்சு சம்பவத்தின் போது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் இன்னும் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். இதுவரை 19 பேரை கைது செய்துள்ளோம். இரவுக்குள் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதங்கள் இன்றி தவிர்க்க இரவு முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கடையை தீ வைத்து எரித்தவர்கள் என சிலரை கண்டறிந்துள்ளோம், ஆனால் அவர்கள் தான் இந்த சம்பவத்தை செய்தார்களா என விசாரணை நடத்தப்படும் என்றார்.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் 144 தடை உத்தரவிற்கு எந்தவித அவசியமும் இல்லை. காவல்துறையினர் தாக்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், வீடியோ பதிவு செய்யப்பட்டு அதில் கண்டறியப்பட்டவர்கள் தோற்றத்தை வைத்து மட்டுமே கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை காவல்துறையினர் எதுவும் செய்யவில்லை. கடையை எரித்தவர்கள், புது சொத்துக்களை சேதப்படுத்துதல், பிறரை தாக்கி காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை சமரச பேச்சுவார்த்தை குழு எடுக்கும். இன்று பேச்சு வார்த்தை நடத்திய போது சிலர் சமரசத்திற்கு உடன்பட்டனர் அவர்களை வைத்து குழுவினர் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். இரண்டு தரப்பினரும் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர் எனவே அவர்களை வைத்து சமரசம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.