முகநூல் காதல் வலை: சென்னை தொழிலதிபரை ஏமாற்றி நகை, பணம் பறித்த பெண் கைது
முகநுாலில் பழகிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்த பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

முகநூல் மூலம் பெண் பழக்கம்
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் முரளி ( வயது 47 ) பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன் சமூக வலை தளமான முகநூல் பக்கத்தில் பூஜா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நெருங்கி பழகி அடிக்கடி தனியாக சந்தித்துள்ளனர். கடந்த 30 - ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில், தொழில் ரீதியாக அறை எடுத்து முரளி தங்கியுள்ளார். அப்போது அப்பெண்ணையும் அழைத்து , இருவரும் மது அருத்தி அதே அறையில் தங்கியுள்ளனர்.
அப்போது , நள்ளிரவில் அறையின் கதவைத் தட்டி உள்ளே புகுந்த இருவரில் ஒருவர், பூஜாவின் கணவர் எனக் கூறி முரளியை மிரட்டியுள்ளார். பின் வெளியில் அழைத்து சென்று அவரது காரிலேயே கடத்தி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் கட்டி வைத்துள்ளனர். அங்கு முரளியை சித்ரவதை செய்து , 9 சவரன் நகை, பணம், மொபைல் போன் செயலி வாயிலாக , 20,000 ரூபாய் பணத்தை பறித்து தப்பியுள்ளனர்.. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
பெண் உட்பட 4 பேர் கைது
அப்போது , பணம் பெற்ற வங்கி கணக்கில் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 32 ) அவரது நண்பர் பூபாலன் ( வயது 32 ) சினேகா ( வயது 32 ) திருப்பூரை சேர்ந்த சுந்தர மூர்த்தி ( வயது 37 ) ஆகிய நால்வரை கைது செய்தனர். விசாரணையில் நண்பர்களான நால்வரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல திட்டங்களை தீட்டி வந்துள்ளனர். அப்போது முகநுால் பக்கத்தில் ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்த முரளியிடம் பணம் இருப்பதை அறிந்துள்ளனர்.
போலி கணக்கு மூலம் காதல் வசனம்
இதற்காக பூஜா என்ற பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை துவங்கிய அவர்கள் , சினேகா மூலம் முரளியிடம் காதல் வசனம் பேசி , அழைத்து பணம் பறித்துள்ளனர். உல்லாசமாக இருந்து விட்டு பணம் பறித்தால் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், இச்செயலில் ஈடுபட்டதாகவும் கைதானோர் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இதே போல், வேறு நபர்களிடம் மோசடி செய்துள்ளனரா என , போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.





















