Son Kills Father : குடிக்க பணம் தராத தந்தை...! கத்தியால் குத்திக்கொன்ற மகன்..!
சென்னையில் குடிக்க பணம் தராத தந்தையை பெற்ற மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சூளைமேடு வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் செல்வம். வயது 55. செங்குன்றத்தில் லைனிங் ஒர்க்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரகாஷ். இளைய மகன் நித்தியானந்தன். மூத்த மகன் பிரகாஷ் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
நித்தியானந்தம் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். ஆனால், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாக எப்போதும் குடிபோதையிலே இருந்து வந்துள்ளார். மேலும், அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு தனது தந்தை செல்வத்திடம் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வம் தனது கடையில் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, தந்தை செல்வத்திடம் நித்தியானந்தம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது செல்வம், தன்னிடம் ஏதும் பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இதுபோல குடித்துக்கொண்டு இருந்தால் உனக்கு யார் பெண் கொடுப்பார்கள்? என்று கேட்டதுடன் கடுமையாக திட்டியுள்ளார். இதனால், நித்தியானந்தன் மிகவும் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர், இரவு 11 மணியளவில் குடிபோதையில் நித்தியானந்தன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த நித்தியானந்தம், குடிபோதையில் தனது தந்தை செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியபோது, நித்தியானந்தம் தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் தந்தை என்றும் பாராமல் செல்வத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். செல்வத்தின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் நித்தியானந்தன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார்.
அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். ஆனால், அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை கைது செய்தனர். பெற்ற மகனே குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்