சென்னையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 7 ஆண்டு சிறை தண்டணை வழங்கிய நீதிமன்றம்
சென்னை ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் வயது 43). இவர் 2017 - ம் ஆண்டு ஜூலை 12 - ம் தேதி தன் வீட்டின் அருகே விளையாடிய 6 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து பட்டாபிராம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், மோசஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் , அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை 10,000 ரூபாய் அபாராதம் விதித்து நீதிபதி மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க , அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மோசஸ் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணம் மூலம் 1.5 கோடி ரூபாய் நிலம் விற்பனை - தியேட்டர் உரிமையாளர் கைது
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த மேரிவர்கீஸ் ( வயது 65 ) சமூக நலத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கொளத்தூரில் உள்ள 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான இவரது நிலத்தை சிலர், போலி ஆவணம் மூலம் விற்றுள்ளனர். இதுகுறித்த அவரது புகாரையடுத்து நில மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து கொளத்துாரைச் சேர்ந்த சீனிவாசன் ( வயது 64 ) மணலியைச் சேர்ந்த இளஞ்செழியன் ( வயது 50 ) ஆகிய இருவரும் , போலி ஆவணம் மூலம் , மேரிவர்கீஸ் நிலத்தை விற்றது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த போலி ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர். சீனிவாசன் கொளத்துாரில் உள்ள கங்கா யமுனா சரஸ்வதி தியேட்டர் உரிமையாளர் என்பதும் இளஞ்செழியன் ஸ்டீல் கடை நடத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கடன் பிரச்சனையால் ATM - இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - சிக்கிய ஹோட்டல் ஊழியர்
சென்னை அண்ணா நகர் W பிளாக் , ஐந்தாவது பிரதான சாலையில் , எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி. எம் மையம் உள்ளது. ஏ.டி.எம்., மையத்திற்குள் நுழைந்த 'குல்லா' அணிந்த நபர், கல் மற்றும் இரும்பு கம்பியால் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். மையத்தில் அலாரம் ஒலித்ததால், பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார் இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. தகவலறிந்து வந்த அண்ணாநகர் போலீசார் ஏ.டி.எம்., மையத்தை சோதித்த போது , இயந்திரத்தின் முன்பக்கம் சேதமடைந்தது தெரிந்தது. சிசிடிவி் கேமரா பதிவுகளை வைத்து அண்ணா நகரிலேயே பதுங்கிருந்த அந்நபரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் ( வயது 19 ) என்பதும் அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள தனியார் ஹோட்டலில் ஊழியராக பணிபுரிவதும் தெரிந்தது.
கடன் பிரச்னையில் இருந்த ராம்குமார், மது போதையில் ஏ.டி.எம்.,மில் கொள்ளையடிக்க திட்ட மிட்டுள்ளார். இதற்காக ஏடிஎம் மையத்தை பல நாட்களாக நோட்டமிட்டுள்ளார். போலீசார், 5 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






















