Crime: வீடு கட்ட வாங்கிய பணம்.. பாட்டியின் கழுத்தை ப்ளேடால் அறுத்த பேரன்! சொன்ன அதிர்ச்சி காரணம்..
சென்னை அருகே வீடு கட்டுவதற்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பிளேடால் பாட்டியை பேரன் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே வீடு கட்டுவதற்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பிளேடால் பாட்டியை பேரன் கழுத்தறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் 70 வயதான விசாலாட்சி. இஅவர் அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இவரது மகள் அமுதா, செங்குன்றம் அடுத்த காந்திநகர் நேரு தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமுதாவிற்கு 28 வயதில் சசிகுமார் என்ற பையன் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விசாலாட்சி வீட்டில், வீடு கட்டுவதற்கு பணம் கொடுத்தது தொடர்பாக விசாலாட்சிக்கும், அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு வந்த சசிகுமார், பாட்டியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சசிகுமார், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து, விசாலாட்சியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பின்னர், அருகிலிருந்த பிளேடால் அவரது கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த விசாலாட்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாலாட்சியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரித்தபோது, விசாலாட்சி கடந்த 4 ஆண்டுக்கு முன்பு தனது மகள் அமுதாக்கு செங்குன்றத்தில் வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதில், பாதி பணத்தை திருப்பி விசாலாட்சியிடம் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இதுதொடர்பாக தாய், மகள் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சசிகுமார், சுத்தியலால் தலையில் அடித்தும், பிளேடால் கழுத்தை அறுத்தும் பாட்டி விசாலாட்சியை கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.