Chennai: இன்ஸ்டா மோகம்! கொரியன் டான்ஸ் வெறி! வீட்டைவிட்டு வெளியேறி கொரியாவுக்கு சின்னமலையில் பஸ் தேடிய சிறுமி!
சிறுமியின் புகைப்படம் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டது. சிறுமியின் செல்போனையும் தொடர்ந்து போலீசார் கண்காணித்தனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரியன் நடனத்தை பார்த்து கற்றுக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டனர்.
சமூக வலைதளங்களில் பல வகையான விஷயங்களும் கொட்டிக்கிடக்கின்றன. இப்போதெல்லாம் விளம்பரம்பரங்கள் சோஷியல் மீடியா மூலமே வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன. அப்படியான ஒரு விளம்பரம் தான் ஒரு சிறுமியை வீட்டைவிட்டே வெளியேற வைத்துள்ளது.
சென்னை சிறுமி..
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே ஏரியாவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்றுகாலை 7.45க்கு வீட்டில் இருந்து மாயமானார். அவரது அறையில் துணிகள் எல்லாம் சிதறி கிடந்துள்ளன. ஆனால் சிறுமி சில துணிகளையும் எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அழைப்பை எடுத்த சிறுமி, நான் கொரியன் டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக கொரியா போகிறேன். என்னைத் தேட வேண்டாமென கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். என்ன செய்வதென்றே தெரியாத பெற்றோர் இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பரபர நடவடிக்கை..
உடனடியாக சிறுமியின் புகைப்படம் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டது. சிறுமியின் செல்போனையும் தொடர்ந்து போலீசார் கண்காணித்தனர். சிறுமிக்கு சென்ற அழைப்பை வைத்து போலீசார் செல்போனையும் ட்ராக் செய்தனர். அப்போது சிறுமியின் செல்போன் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் காட்டியுள்ளது. உடனடியாக சின்னமலை பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார் சிறுமியின் செல்போனை வைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கொரியா செல்வதற்காக சின்னமலை பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர்.
கொரியா டான்ஸ்..
மீட்கப்பட்ட சிறுமியை காவல் நிலையம் அழைத்துவந்த போலீசார் விசாரணை நடத்தினர், விசாரணையில் கொரியா டான்ஸ் கற்றுக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமிக்கு சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் இருந்துள்ளது. இடையே ஆன்லைன் வகுப்புக்காக அவருக்கு செல்போனையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஸ்மார்ட்போனில் இன்ஸ்டா கணக்கை தொடங்கிய சிறுமி அதன் மூலம் பல பக்கங்களையும் ஃபாலோ செய்துள்ளார்.
நடனத்தில் ஆர்வமுள்ள சிறுமி கொரியா டான்ஸ் பக்கத்தையும் பின் தொடர்ந்துள்ளார். அதன் மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டில் மறுப்பு தெரிவிக்கவே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். ஆனால் கொரியா என்பது வெளிநாடு என்பது தெரியாமல் கொரியா பஸ்ஸுக்காக சின்னமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். பின்னர் சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட காவலர்களை பொதுமக்களும், உயர் காவல் அதிகாரிகளும் பாராட்டியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்