சென்னையில் பயங்கரம்... தந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மகன் - சிக்கியது எப்படி?
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் மனைவி மற்றும் தாயைப் பற்றி அவதூறாக பேசிய தந்தையை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மகன் கைது.

குடியால் கூட்டு குடும்பத்தில் வந்த பிரச்சனை
சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் ஜி - பிளாகில் வசித்து வருபவர் பாலு ( வயது 50 ). இவர் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். இவருக்கு வள்ளி ( வயது 42 ) என்ற மனைவியும் கார்த்திக் ( வயது 29 ) என்ற மகனும் அஞ்சலை ( வயது 25 ) என்ற மருமகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றனர். குடி போதைக்கு அடிமையான பாலு அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் , கார்த்திக் மற்றும் அவரது தந்தை பாலு ஆகியோருக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
நாடகம் செய்த மகன்
அப்போது திடீரென கார்த்திக் அக்கம் பக்கத்தினரை அழைத்து தனது தந்தை போதையில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டார் எனக் கூறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்னுக்கு பின் முரணான தகவல்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாலு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். உயிரிழந்த பாலுவின் முதுகில் கத்தி குத்து இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒப்புதல் வாக்கு மூலம்
விசாரணையில் தனது தாயார் வள்ளி மற்றும் மனைவி அஞ்சலை ஆகிய இருவரை பற்றி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆண்களோடு தொடர்புபடுத்தி மிக கேவலமாக பேசியதால் தந்தை பாலுவை கண்டித்ததாகவும் அவர் கேட்காமல் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் ஹெல்மெட்டால் தலையில் அடித்ததாகவும் அவர் மயக்கமான போது வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து முதுகில் குத்தியதாகவும் , பிறகு இடது வயிற்றில் இரண்டு முறை குத்தி விட்டு மது போதையில் தன்னைத் தானே குத்திக் கொண்டார் என அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் கார்த்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.





















