நான்கு பெண்களை ஏமாற்றி நாசுக்காக தலைமறைவான தொழிலதிபர்: கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் புகார்!
சென்னையில் 4 பெண்களிடம் காதலிப்பதாக கூறி வீடு மற்றும் பணத்தை பறித்ததாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 பெண்களிடம் காதலிப்பதாக கூறி வீடு மற்றும் பணத்தை பறித்ததாக தொழிலதிபர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரைச் சேர்ந்த காஞ்சனா, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தி, தி.நகரைச் சேர்ந்த தாட்சாயிணி, போரூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகியோர் தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
காஞ்சனா அளித்த புகார் மனுவில், “அசோக் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். எனது வீட்டின் கீழ் தளத்தில் ஆனந்தராஜ் என்பவர் வாடகைக்கு அலுவலகம் நடத்தி வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் என்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். மேலும் தனியாக தொழில் செய்ய வேண்டும் எனக்கூறி எனது வீட்டையும் கிரையம் எழுதி வாங்கினார். பின்னர் என்னை விட்டு விலகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
பாக்கியலட்சுமி அளித்த புகாரில், “ஆனந்தராஜ் என்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். பின்னர் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்த பிறகு 2020 ஆம் ஆண்டு வடபழனி கோயிலில் என்னை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ரூ.10 லட்சம் கேட்டு என்னை கொடுமைப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனந்தி அளித்த புகாரில் “வளசரவாக்கத்தில் ஒரு அழகு நிலையத்தை ஆனந்தராஜ் தனது நண்பருடன் இணைந்து நடத்தினார். அங்கு நான் மேலாளராக வேலை செய்தேன். அப்போது ஆனந்தராஜ் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடிவந்து விட்டேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாட்சாயிணி அளித்த புகார் மனுவில், “ஆனந்தராஜ் அலுவலக வாடகை கட்டடத்திற்கு முன் பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். அதை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அசோக்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரே நபர் 4 பெண்களிடம் ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்