நண்பனுடன் சேர்ந்து மனைவிக்கு வன்கொடுமை! வீடியோ பதிவு - சிக்கிய சென்னை தொழிலதிபர்!
மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியது மற்றும் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட புகாரில் சென்னை தொழிலதிபரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனைவியை கடுமையாக அடித்து துன்புறுத்தியது மற்றும் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட புகாரில் சென்னை தொழிலதிபரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதி:
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 35 வயதான பெண் ஒருவர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவரது கணவர் கடுமையாகத் தாக்கியதுடன், கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததுத் தெரியவந்தது.
காவல்துறை விளக்கம்:
இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை “சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அவரது மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். படுகாயங்களுடன் அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கணவரின் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து கொலை முயற்சி வழக்கு அப்பெண்ணின் கணவர் மீதும், பாலியல் வன்கொடுமை வழக்கு கணவரின் நண்பர் மீதும் பதியப்பட்டுள்ளது. மேலும், இருவர் மீதும் பாலியல் வன்கொடுமையை ஒளிப்பதிவு செய்து அதை பரப்ப முயற்சி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். இருவரையும் கைது செய்த திருச்சூர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முந்தைய சம்பவம்:
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி பலமுறை வற்புறுத்தியதாக, 2 வருடங்களாகக் கணவனின் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்குப் பிறகு அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்ததும், இந்த புகார் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீதிமன்றத் தீர்ப்பு:
"ஓர் ஆண் என்பவர் ஆண் தான்; ஒரு செயல் என்பது செயலே; பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் வன்கொடுமையே. அது ஆண் என்ற 'கணவரால்', பெண் என்ற 'மனைவி' மீது நடத்தப்பட்டாலும் அது பாலியல் வன்கொடுமையே", என்று சமீபத்தில் கர்நாடக நீதிமன்றமும், “மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் கணவனிடம் இருந்து, மனைவி விவாகரத்து கோரலாம்” என்று, கேரள உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.