பைக் மெக்கானிக்கை வெட்டிய மர்ம கும்பல்.! விஐபி விரோதமா? பெண் விவகாரத்தால் சிக்கலா?
சென்னை, அண்ணாநகரில் பைக் மெக்கானிக்கை மர்மநபர்கள் 3 பேர் சரமாரியாக தாக்கிய விவகாரத்தில் பெண் விவகாரம்தான் காரணமா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னையின் முக்கியமான நகர்களில் ஒன்று அண்ணாநகர். வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இந்த பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த பல வி.ஐ.பி.க்களும் தங்களது விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை பழுதுபார்ப்பதற்காக கொண்டு வருவது வாடிக்கை. அப்போது, அவருக்கும், அதே பகுதியில் உள்ள பிரபல கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் உறவினரான வி.ஐ.பி. ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், மெக்கானிக் இளைஞருக்கும் அவருக்கு தெரிந்த பெண்ணுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த வி.ஐ.பி. நண்பர் மெக்கானிக் கடை இளைஞருக்கு தெரியாமல் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் வி.ஐ.பி. நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணும், தனது வி.ஐ.பி. நண்பரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மெக்கானிக் இளைஞருக்கு கிடைத்துள்ளது.

இந்த புகைப்படத்தை வி.ஐ.பி. நண்பரின் உறவினரான கொட்டிவாக்கத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவருக்கு மெக்கானிக் இளைஞர் அனுப்பியுள்ளார். இதனால், அந்த வி.ஐ.பி. நண்பர் வீட்டில் மிகப்பெரிய பிரளயமே நடந்துள்ளது. இதனால், தனது வீடு வரை இந்த விவகாரத்தை மெக்கானிக் நண்பர் கொண்டு வந்துவிட்டார் என்ற கோபத்தில் அந்த வி.ஐ.பி. இளைஞர் இருந்துள்ளார்.
மேலும் படிக்க : Crime: செல்போனில் பெண்களின் நிர்வாணப்படம்! 50க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை! சிக்கிய நபர்!
இந்த நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன்பு மெக்கானிக் கடையின் முன்பு 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து மெக்கானிக்கை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர், அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர், அந்த மெக்கானிக் இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் காவல்நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்கானிக் கடைக்குள் புகுந்து அடையாளம் தெரியாத 3 நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Crime: முதல் கணவரைப் பார்க்க ஆசைப்பட்ட மனைவி.. கிச்சன் கத்தியால் குத்திக்கொன்ற இரண்டாவது கணவன்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















