சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! ₹11.5 கோடி தங்கம் கடத்தல்: ஏர்கோட்சஸ்கள் உட்பட 5 பேர் கைது!
துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.11.5 கோடி மதிப்புடைய, 9.46 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தலில் ஈடுபட்ட விமான ஏர்கோட்சஸ்கள் 2 பேர் உட்பட, 5 பேரை சுங்கத்துறையினர் கைது செய்து, சுங்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள்
துபாயிலிருந்து சென்னை வரும் விமானத்தில் பெருமளவு, கடத்தல் தங்கம் வருவதாகவும், கடத்தலில் விமானத்தில் பறந்து வரும் விமான பணியாளர்கள், ஈடுபட்டுள்ளதாகவும், ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை, 8 மணிக்கு துபாயில் இருந்து, சென்னை வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும், விமானத்தை விட்டு கீழே இறங்கி சென்றனர். இதை அடுத்து விமானத்தில் ஏர்கோட்சஸ் பணியில் உள்ள பெண்கள், ஆண்கள் ஆகியோரும் கீழே இறங்கி வந்தனர்.
அவர்களில் 2 ஆண் ஏர்கோட்சஸ்கள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதோடு அந்த விமானத்தின் கேப்டனிடம் சுங்க அதிகாரிகள் முறைப்படி அனுமதி பெற்ற பின்பு, அந்த இரண்டு ஆண் ஏர்கோட்சஸ்களையும், சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர்களை, முழுமையாக பரிசோதித்தனர். அவர்களின் உடல்களில், இடுப்பு மார்பு உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவில் உடலில் ஒட்டக்கூடிய வெல்க்ரோ ஸ்டிக்கர் பேண்டுகளை ஒட்டி இருந்தனர்.
சுத்தமான 24 கேரட் தங்கம்
அதைப் பிரித்துப் பார்த்தபோது வெள்ளை காகிதத்தில் 10 பார்சல்கள் இருந்தன. அந்தப் பார்சல்களில் தங்க பேஸ்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்க பேஸ்ட்களை எடுத்து சுத்தம் செய்த போது, மொத்தம் 9 கிலோ, 460 கிராம் சுத்தமான 24 கேரட் தங்கம் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
இதை அடுத்து அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, இதே விமானத்தில் பயணம் செய்து வந்த பயணி ஒருவர் துபாயில் இவர்களிடம், விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கொடுத்த இந்த தங்க பேஸ்டுகளை, இவ்வாறு உடலில் ஒட்டி எடுத்து வந்துள்ளதாகவும் தெரிய வந்தது.
திடுக்கிடும் தகவல்:
மேலும் இந்த விமான ஊழியர்கள் இந்தியர்கள் தான். ஆனால் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று சென்னைக்கு விமானத்தில் பணியில் வந்து விட்டு, சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில், தங்கிவிட்டு, மீண்டும் இன்று காலை சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் பணியில், துபாய்க்கு செல்வார்கள் என்று தெரிய வந்தது.
மேலும் விமான ஊழியர்கள் இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்தபோது, இந்தத் தங்கத்தை, இவர்கள் சென்னை விமான நிலையம் அருகே, தங்க இருக்கும் விடுதியில் வந்து, தங்கத்தை கொடுத்த பயணி, மற்றும் இந்த தங்கத்தை வாங்க இருக்கும் இரண்டு பேர் பெற்று செல்வார்கள் என்று கூறினர்.
சர்வதேச மதிப்பு ரூ.11.5 கோடி.
இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள், உடனடியாக சென்னை விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று, அங்கு தங்கியிருந்த பயணி ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த தங்கத்தை வாங்க இருந்த இரண்டு பேர் ஆகிய மூன்று பேர், ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 9.46 கிலோ சுத்தமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.11.5 கோடி.
இதை அடுத்து விமான ஏர்கோட்சஸ் இரண்டு பேர் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலை, சுங்க அதிகாரிகள் கைது செய்து, இன்று அதிகாலை, சென்னையில் உள்ள சுங்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். அதோடு அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து மேலும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட விமான ஏர் கோட்சட்ஸ் 2 பேர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து, ரூ.11.5 கோடி மதிப்புடைய 9.46 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















