சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! ரூ.4 கோடி தங்கம் கடத்தல்: மலேசிய ஜோடி கைது! நடந்தது என்ன ?
"பினாங்கு நாட்டில் இருந்து, சென்னை வந்த விமானத்தில், கடத்தி கொண்டுவரப்பட்ட, ரூ.4 கோடி மதிப்புடைய, 2.765 கிலோ தங்கம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது"

"24 கேரட் சுத்தமான தங்கத்தை, உடற்பயிற்சி கருவியான டம்பிள்ஸ்களுக்குள், மறைத்து வைத்து கொண்டு வந்த, மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஆண் பெண் பயணிகள் இருவரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், கைது செய்து மேலும் விசாரணை"
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்
பினாங்கு நாட்டிலிருந்து, சென்னைக்கு வரும் விமானம் ஒன்றில், பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள டி.ஆர்.ஐ., எனப்படும், மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, இன்று அதிகாலையில் வந்து, மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு, இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து, சென்னை வரும் அனைத்து விமான பயணிகளையும், தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, சோதனை நடத்திக் கொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை 10.30 மணி அளவில், பினாங்கு நாட்டிலிருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசிய நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயதுடைய ஆண், பெண் பயணிகள், இருவர், பினாங்கு நாட்டில் இருந்து, சுற்றுலாப் பயணிகள் விசாவில், சென்னைக்கு வந்திருந்தனர்.
மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு, அந்த இரண்டு மலேசிய நாட்டு பயணிகள் மீது, சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதை அடுத்து, அவர்கள் இருவரின் உடமைகளையும் திறந்து பார்த்து சோதித்தனர்.
உடற்பயிற்சி டம்பிள்ஸ் கடத்தப்பட்ட தங்கம்
அவர்கள் உடமைக்குள், உடற்பயிற்சிக்கு பயன்படுத்தும் டம்பிள்ஸ் (dumbles) 2 இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அதை கழற்றி பார்த்தனர். அதனுள் சுத்தமான 24 கேரட் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.2 டம்புள்ஸ் உடற்பயிற்சி கருவிகளிலும், 2 கிலோ,765 கிராம் சுத்தமான தங்கம் இருந்தது.அந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள்,2 மலேசியா நாட்டுப் பயணிகளை கைது செய்து, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், கைது செய்யப்பட்ட 2 பயணிகள், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், ஆகியவற்றுடன், சென்னை தியாகராய நகரில் உள்ள டி ஆர் ஐ அலுவலகத்திற்கு சென்று, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல் ஆசாமி யார் ?
இவர்கள் இந்த கடத்தல் தங்கத்தை, சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தனர்? இந்த தங்கம் கடத்தலின் பின்னணியில் உள்ள முக்கிய கடத்தல் ஆசாமி யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், நூதனமான முறையில், உடற்பயிற்சி கருவிக்குள்,ரூ.4 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்தி வந்த, மலேசியா நாட்டைச் சேர்ந்த, ஆண், பெண் பயணிகள் இருவரை, மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















