தலைக்கேறிய போதை! கோயம்பேட்டில் மகன்களை தொலைத்துவிட்டு செல்போனைத் தேடிய அப்பா!
கோயம்பேட்டில் மது குடிக்க சென்ற தந்தை, தனது பிள்ளைகளை தவற விட்டு விட்டு, செல்போனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் 42 வயதான முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளநிலையில், நேற்று கோயம்பேடு நிலையத்திற்கு இரண்டு மகன்களுடன் வந்த முருகன் அவர்களை பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரத்தில் உட்கார வைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தந்தை வராததால் மகன்கள் இருவரும் செய்வதறியாது கதறி அழுது கொண்டிருந்தனர். இதைகண்ட அப்பகுதி மக்கள், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலிருந்து வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன், இரண்டு , சிறுவர்களையும் மீட்டு கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு அந்த சிறுவர்களுக்கு மதிய உணவு மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்து காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர்.
பின்னர், கோயம்பேடு காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது, இரண்டு சிறுவர்களை அமர வைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு முருகன் செல்வது தெரியவந்துள்ளது. சிறுவர்களின் பெற்றோர் குறித்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக வந்தனர்.பின்னர், குடிபோதையில் ஒரு நபர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்து தனது செல்போனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
அப்போது, மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்த சிறுவர்கள் தனது தந்தையை பார்த்து அழுது கொண்டே ஓடி வந்துள்ளனர். இதை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதையில் இருந்த முருகன், தனது பிள்ளைகளை கட்டிப்பிடித்து அழுதார்.
போலீசார் முருகனிடம் விசாரித்தபோது, “மதுகுடிக்க சென்றபோது பிள்ளைகளை விட்டு சென்றேன். போதையில் பிள்ளைகளை அழைத்து வந்ததை மறந்து விட்டேன். சிறிது நேரம் கழித்துதான் விட்டு சென்ற இடத் தில் பிள்ளைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்தால் போலீசார் திட்டுவார்கள் என பயந்து செல்போனை காணவில்லை புகார் அளிக்க வந்தேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து கோயம்பேடு போலீசார் முருகனை கடுமையாக எச்சரித்து அவருடன் இரண்டு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். மதுகுடிக்க வந்த நபர் தனது பிள்ளைகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்