(Source: ECI/ABP News/ABP Majha)
Chennai: எல்லாமே தங்கம்.. மொத்தம் 46 சவரன்.. பூஜை பொருட்களுடன் எஸ்கேப் ஆன பூசாரி!
கோயில் பூசாரி ஒருவர் 46 சவரன் தங்க பூஜை பொருட்களை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள ஜெயின் கோயிலில் 46 சவரன் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் கோயில் பூசாரிக்கு தொடர்பு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பகுதியில் ரங்கநாதன் அவின்யூவில் ஸ்தாம்பர் மூர்த்தி ஜெயின் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அதேபகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி மீனா சாக்ரியா தினமும் பூஜை நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் சாமி கும்பிட சென்றுள்ளார்.
அப்போது அவர் 46 சவரன் மதிப்பிலான தங்க பூஜை சாமான்களை எடுத்து சென்றதாக தெரிகிறது. அதை வைத்து அவர் பூஜை செய்துள்ளார். அந்தப் பூஜை முடிந்த பிறகு அவர் கோயிலை சுற்றி வழிபாடு நடத்தியுள்ளார். அதன்பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அந்த பூஜை பொருட்களை காணவில்லை. மேலும் பூசாரியையும் கோயிலில் இல்லாமல் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது கோயிலின் பூசாரி அந்த தங்க பொருட்களை எடுத்து வருவது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து பூசாரி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தக் கோயிலில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ராவல்(38) பூசாரியாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் தன்னுடைய நண்பர் மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து இந்தப் பொருட்களை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பூசாரி விஜய் ராவல் மற்றும் அவருடைய நண்பர் மகேந்திரனை தேடியுள்ளனர். விஜய் ராவலின் செல்போன் டவரை வைத்து காவல்துறையினர் தேடி வந்துள்ளனர்.
அந்த சமயத்தில் அவர் சென்னை கோயம்பேட்டிலிருந்து பேருந்தில் தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. அப்போது அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 46 சவரன் பூஜை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். பூசாரியின் நண்பர் மகேந்திரனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயில் பூசாரியே 46 சவரன் மதிப்பிலான பூஜை பொருட்களை திருடி சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்