Crime: இனிமேல் கல்லூரிக்கு செல்போன் கொண்டு செல்லாதே... கண்டித்த பெற்றோர்.. விரக்தியில் மாணவி செய்த செயல்!
சென்னை அருகே இனிமேல் கல்லூரிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என பெற்றோர் கண்டித்ததால் 18வயது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தாம்பரம் அருகே உள்ல சிட்லப்பாக்கம் பாரதிபுரம் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவருக்கு 18 வயதான ஸ்ரீமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படித்து வந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முரளிதரன் தனது மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றுள்ளார். கல்லூரியில் விடுமுறை அளிக்காதநிலையில் வீட்டில் ஸ்ரீமதி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்தநிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீமதி , தேர்வு மையத்தின்போது செல்போன் எடுத்துச்சென்றுள்ளார். இந்த விஷயம் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தெரியவர, இனிமேல் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லக்கூடாது எனவும், வீட்டிலும் நாங்கள் போன் செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் செல்போன் அதிகம் பயன்படுத்தக்கூடாது என ஸ்ரீமதியை கண்டித்துள்ளனர்.
இதையடுத்து, பெற்றோர் கண்டித்ததால் மிகவும் மனவேதனை அடைந்த ஸ்ரீமதி விரக்தியில் இருந்துள்ளார். மகளை சமதானப்படுத்த சிறிது நேரம் கழித்து ஸ்ரீமதியிம் பெற்றோர்கள் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும் ஸ்ரீமதி போன் எடுக்கவில்லை.
தொடர்ந்து நேற்று காலை மீண்டும் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் செல்போனில் ஸ்ரீமதியை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ஸ்ரீமதி போன் எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பக்கத்து வீட்டினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, பக்கத்து வீட்டினர் முரளிதரன் வீட்டை அடைந்து சோதனை மேற்கொண்டதில், ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் சிட்லபாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய ஸ்ரீமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கு வேறும் ஏதும் காரணமா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் :
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் :
மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050