ECR பக்கம் போகும் காதல் ஜோடிகளின் கவனத்திற்கு! குரூப்பாக சுற்றும் ரவுடி கும்பல்! எச்சரிக்கும் போலீஸ்!
சவுக்கு தோப்புகளில் தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகள், செல்போன் பறிக்கும் திட்டத்தில் வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது
திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டம் தீட்டி ஆட்டோவில் வந்த 5 ரவுடிகள் கைது.
கிழக்கு கடற்கரைச் சாலை
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சாலை ஓரத்திலேயே கடற்கரை தெரியும் என்பதால் அதிகளவு பொதுமக்கள் குவிவது வழக்கம். காதலர்களும், திருமணம் ஆன இளம் ஜோடிகளும் தனிமையில் சந்திக்கவும் நேரத்தை செலவிடவும் இதுபோன்ற இடத்தை பயன்படுத்துகின்றனர். காதலர்கள் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி சில மர்ம ஆசாமிகள் தவறான செயலில் ஈடுபடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. தொடர்ந்து இது போன்ற நபர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டம் தீட்டி ஆட்டோவில் வந்த 5 ரவுடிகள் கைது வாகன சோதனையின்போது பிடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குட்டி ரவுடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை சாவடி
செங்கலபட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை சோதனை சாவடி மையத்தில் மாமல்லபுரம் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆட்டோவில் 5 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் திருதிருவென முழித்தனர். அங்கிருந்த சோதனை சாவடியில் இருந்து ஆட்டோவை அதிவேகத்தில் இயக்க முற்பட்டனர். பிறகு போலீசார் பேரிகார்டர் போட்டு ஆட்டோவை மடக்கி அதில் பயணித்த 5 வாலிபர்களையும் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று முறையாக விசாரித்தனர்.
குட்டி ரவுடிகள் கைது
அப்போது ஆட்டோவில் வந்த சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பிரதீப்(வயது21), பிரவீன்(வயது23), மகேஷ்குமார்(வயது22), மோகன் (வயது23), காட்டங்குளத்தூர் பகுதியை சேர்ந்த குமார்(வயது24) ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் 5 பேர் மீது மணிமங்கலம், ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளது என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
தனிமையில் இருக்கும் காதல் ஜோடி
இந்நிலையில் ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள திருவிந்தை கடற்கரை பகுதிக்கு அதிகளவில் இரு சக்கர வாகனத்தில் வந்து, சவுக்கு தோப்புகளில் தனிமையில் இருக்கும் காதல் ஜோடிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகள், செல்போன் பறிக்கும் திட்டத்தில் வந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. பிறகு 5 பேரையும் கைது செய்த போலீசார் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 5 ரவுடிகள் வந்த ஆட்டோவும், அவர்கள் கொண்டு வந்த கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.