Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை வீரர் கைது
சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ படை வீரர் கைது செய்து அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூன்று கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் என்பவரின் மகன் 27 வயதான கனிவண்ணன். இவர் கேட்டரிங் படித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் மீண்டும் ஊர் திரும்பி சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 -ஆம் தேதி இரவு சட்டநாதபுரம் உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் நெற்றி பொட்டில் துளை போட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது இருசக்கர வாகனதுடன் இறந்து கிடந்துள்ளார். இவர் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர், கனிவண்ணனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கனிவண்ணன் தூப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தடயங்கள் தென்பட, கனிவண்ணன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தினர். மேலும், தடய அறிவியல் சோதனைக்காக கனிவண்ணின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை எஸ்.பி. ஜவகர் மேற்பார்வையில், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 11 உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகளை அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடய அறிவியல் பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்த நிலையில், கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் குடும்பத்தினர் தெரிவித்ததால் கனிவண்ணன் உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கனிவண்ணனின் செல்போனுக்கு வந்த கால் நம்பர்களை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இந்நிலையில், இவரும் தென்பாதி ஆர்விஎஸ் நகரை சேர்ந்த விசாகப்பட்டினம் மத்திய துணை ராணுவ படையில் பணியாற்றி வரும் 50 வயதான தேவேந்திரன் ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நண்பராக பழகி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2 தேதி இரவு சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் உப்பனாற்றாங்கரையில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது தேவேந்திரன் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் கனிவண்ணனை நெற்றி பொட்டில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கணிவண்ணன் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் கனிவண்ணின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மத்திய துணை ராணுவ படை வீரர் ஒருவரின் அழைப்பு கடைசியாக வந்துள்ளதை போலீசார் உறுதி செய்து தேவேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கணிவண்ணை சுட்டுக் கொன்றதாக மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தென்பாதி ஆர்விஎஸ் நகரில் உள்ள அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கியும், சொந்த கிராமமான வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் இருந்து ஒரு துப்பாக்கியும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தேவேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இந்த மூன்று துப்பாக்கிகளும் கள்ளத்துப்பாக்கி என்பதும், ஒரு துப்பாக்கி 19 ரவுண்ட் சுடக்கூடிய 9எம்எம் துப்பாக்கி என்பதும், மற்றொன்று பறவைகள் வேட்டையக்கூடிய ஏர் கன் துப்பாக்கி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.