மத்திய பிரதேசத்தில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தல்.. தமிழ்நாட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்..
தர்மபுரி அருகே, ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்கு காரில் ஹெராயின் கடத்தி வந்த இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அருகே, ராஜஸ்தானில் இருந்து இலங்கைக்கு காரில் ஹெராயின் கடத்தி வந்த இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தானில் இருந்து பெங்களூர், சேலம், ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு ஹெராயின் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த கவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள பாளையம் சுங்க சாவடியில் நள்ளிரவில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வரும் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வந்தனர். அப்பொழுது மத்திய பிரதேச பதிவெண் கொண்ட சொகுசு காரில் இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணுடன் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்பொழுது காரின் டிக்கியை திறந்து காவலர்கள் சோதனை செய்தனர். அப்பொழுது டிக்கி கதவில் மறைத்து வைத்திருந்த ஹெராயினை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து காரிலிருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழகத்தை சேர்ந்த கோபலகிருஷ்ணன் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்ராவ் என்பது தெரியவந்தது. இந்த ஹெராயினை ராஜஸ்தானில் இருந்து பெங்களூர், தருமபுரி, சேலம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிக்கு காரில் கடத்தி வந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவரின் மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதனையடுத்து 3.2 கிலோ ஹெராயின் மற்றும் கடத்தலுக்குப பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து, தமிழகத்தை சேர்ந்த கோபலகிருஷ்ணன் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்ராவ் ஆகிய இருவரை மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த காரில் வந்த பெண், கடத்தி வந்தவரின் உறவினர் என்றும் அந்த பெண்ணிற்கும் இக்கடத்தலுக்கும் தொடர்பில்லை என தெரியவந்தால், அவரை விடுவித்தனர். தொடர்ந்து கடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரத்தை சேர்ந்தவரை பிடிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விரைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு தெரிவிக்காமல் , தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய போதை தடுப்பு பிரிவினர் ஹெராயினை பறிமுதல் செய்து இருவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.