செல்போன் கடையை உடைத்து கொள்ளை; செல்போன், பணத்தோடு சேர்த்து திருப்பதி உண்டியலையும் திருடிய கும்பல்..!
ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த ஆறு ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் கடையில் இருந்த 10 ஆயிரம் ரொக்கம் மேலும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காணிக்கை ஆகியவற்றை கொள்ளை கும்பல் திருடிச் சென்றது
திருவாரூரில் செல்போன் கடையை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிவலம் மற்றும் நெய்விளக்கு தோப்பு போன்ற இடங்களில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு என்பது நடைபெற்று கொண்டிருக்கிறது. இவ்வாறு திருடப்படும் இருசக்கர வாகனங்கள் மது மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. திருவாருரில் இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் அருகே புலிவலம் கடைவீதியில் ரெங்கராஜன் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு ரெங்கராஜன் வீட்டுக்கு சென்று இருக்கிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை பார்த்து கடையின் உரிமையாளர் ரெங்கராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் ரெங்கராஜன் தன்னுடைய கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கடையில் இருந்த பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த ஆறு ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் கடையில் இருந்த 10 ஆயிரம் ரொக்கம் மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த காணிக்கை ஆகியவற்றை கொள்ளை கும்பல் திருடிச் சென்றது தெரியவந்தது. அதனையடுத்து ரெங்கராஜன் திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் திருட்டுப்போன கடையில் மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் குற்றவாளிகளின் கைரேகைகளை அடையாளம் கண்டு வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்று நேற்று இரவு நாகை மாவட்டத்தில் உள்ள குருக்கத்தி மற்றும் ஆழியூர் ஆகிய இடங்களில் எட்டுக்கும் மேற்பட்ட கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து கீழ்வேளூர் காவல் துறையினரை கண்டித்து அப்பகுதி வணிகர்கள் போராட்டம் நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்ற குருக்கத்தி என்பது திருவாரூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே அங்கு கைவரிசை காட்டிய கும்பல் புலிவலம் செல்போன் கடையிலும் திருடி இருக்கலாம் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் தீவிர இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்