Crime : "மழலையில் விளக்கிய குழந்தை” : 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வாகன ஓட்டுநர்.. பதறவைக்கும் கொடூரம்..
மூன்று மாதங்களுக்கு முன்னதாகத்தான் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக சேர்ந்திருக்கிறார் . அவருக்கு இரண்டு மைனர் பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பெண் உதவியாளர் முன்னிலையில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மழைலையர் பள்ளியில் படித்து வந்த 3 வயது பெண் குழந்தை கடந்த வியாழன் அன்று பேருந்தில் இருந்து இறங்கி வீடு திரும்பியபொழுது , பள்ளி சீருடையில் இல்லாமல் கூடுதலாக வைத்து அனுப்பப்படும் மாற்று உடையில் இருந்திருக்கிறார். இதனை கண்ட குழந்தையின் தாய் , சிறுமியிடம் உடை மாற்றியது யார் என்று கேட்டபோது, குழந்தையால் சொல்ல முடியவில்லை. பின்னர் குழந்தையின் வகுப்பு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை அழைத்து நீங்கள் ஏதும் உடை மாற்றினீர்களா என கேட்டபொழுது, அதனை அவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து குழந்தை தனது பிறப்புறுப்பில் வலிப்பதாக கூறவே தாய் அதிர்ந்து போனார். பின்னர் குழந்தைக்கு ஆறுதலாக பேசிவிட்டு , தாய் நடந்தவற்றை பொறுமையாக குழந்தையிடம் கேட்டபொழுது , குழந்தை தன்னை வாகன ஓட்டுநர் வன்கொடுமை செய்ததை அவர் மொழியில் விளக்கிக்கூறவே , பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது.
மறுநாள் குழந்தையுடன் பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் , அங்கு குற்றவாளியை அடையாளம் காட்டச்சொல்லி , திங்கள் கிழமை அவர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அந்த ஓட்டுநரையும் , உடன் இருந்த பெண் உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர், மூன்று மாதங்களுக்கு முன்னதாகத்தான் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக சேர்ந்திருக்கிறார் . அவருக்கு இரண்டு மைனர் பெண் குழந்தைகளும் உள்ளனர். குற்றம் நடந்த நாளன்று , 9 முதல் 12 குழந்தைகளை அவன் பேருந்தில் அழைத்து வந்திருக்கிறான். குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை , மற்ற குழந்தைகள் முன்பு நடந்ததா ? அல்லது பாதிக்கப்பட்ட குழந்தை மட்டும் தனியாக இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை வாகனத்தில் இருந்து இறக்கும் பொழுது , பேருந்தில் அந்த பெண் உதவியாளரை பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். இதன் மூலம் அவரும் இந்த பதறவைக்கும் குற்றச்சம்பவத்தில் உடந்தையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.
பெற்றோர்கள் புகாரை, அடுத்த நாளான திங்கள் கிழமை கொடுத்ததால் தடயவியல் சோதனைகளில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர்.
குற்றவாளிகளிடம் உடை மாற்றியது யார் என கேட்டபொழுது , ஓட்டுநரும் அந்த பெண் உதவியாளரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதாக தெரிவித்துள்ள காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் ஐபிசி பிரிவு 376 ஏபி (12 வயதுக்குட்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தல், மரண தண்டனை விதிக்கப்படும்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5/6 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.