சட்டை காலரில் கட்டை கட்டையாக போதைப்பொருள்... முக்கிய குற்றவாளிகளை சுற்றிவளைத்த சுங்கத்துறை!
சென்னை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ரூ.9.86 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் என்ற போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடத்தப்பட இருப்பதாக சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ரூ.9.86 கோடி மதிப்பிலான சூடோபெட்ரின் என்ற போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
சென்னை சுங்கத்துறை விமான சரக்கு நுண்ணறிவு பிரிவினர் ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் ஏற்றுமதி சரக்குகளில் இருந்து சட்டைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 50 கிலோ மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அதிரடியாக சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து விதமான பார்சல்களையும் பிரித்து சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு அட்டைப்பெட்டியில் நிறைய புது சட்டைகள் மடிக்கப்பட்டநிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து, அந்த சட்டையை பிரித்து பார்த்தபோது சட்டை மடங்காமல் இருக்க, வெள்ளை அட்டை வைக்கப்பட்டு இருந்தது.
அப்படியாக மொத்தம் 515 சட்டைகளில் உள்ள வெள்ளை அட்டையை பிரித்து பார்த்ததில் சிறிதாக பேக் செய்த சூடோபெட்ரின் என்ற போதைப்பொருள் இருந்துள்ளது. தொடர்ந்து, 49.2 கிலோ எடையிலான ரூ.9.86 கோடி மதிப்பில் போதைப்பொருளை கைப்பற்றினர்.
போதைப்பொருளை கடத்தியதாக 3 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் NDPS சட்டத்தின் பிரிவு 8 இன் விதிகளை மீறியதாகவும், NDPS சட்டத்தின் பிரிவு 21, பிரிவு 23 மற்றும் பிரிவு 29 இன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்