கேரள கடற்கரையில் அமெரிக்க பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை…
அவர்கள் கொடுத்த சிகரெட்டை மறுத்த பின்னர், இருவரும் அவருக்கு அவர்களிடம் இருந்த மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். அந்த பெண் மது அருந்த ஆரம்பித்தவுடன், போதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கேரளாவில் தங்கியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவரை கொல்லம் அருகே உள்ள ஆசிரமத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டனர். ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் பெண் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
ஆசிரமம் அருகே கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த 41 வயது அமெரிக்க பெண் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரண்டு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கபட்ட பெண்ணின் புகாரின்படி, அந்த இரு ஆண்களும் இந்த பெண்ணை அணுகி சிகரெட்டைக் கொடுத்ததாக போலிஸார் தெரிவித்தனர். ஆனால் அவர் அவர்கள் கொடுத்த சிகரெட்டை மறுத்துள்ளார். பின்னர் அந்த இருவரும் அவருக்கு அவர்களிடம் இருந்த மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். அந்த பெண் மது அருந்த ஆரம்பித்தவுடன், போதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழக்குப்பதிவு
PTI இன் தகவ்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட இரு நபர்கள் மீது IPC 376D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருநாகப்பள்ளி காவல் நிலைய அதிகாரி கூறுகையில், "குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் கைது இன்னும் பதிவு செய்யப்படவில்லை, அவர்கள் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளனர்," என்றார்.
அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்
அமெரிக்க பெண்ணுக்கு 'ரம்' கொடுத்து அவர் மதுபோதையில் இருந்தபோது அவரை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் அமெரிக்க பெண்ணை ஒரு பைக்கில், அருகில் உள்ள காலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு அந்தப் பெண் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவர் ஜூலை 22ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐந்தாண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம்
இதற்கிடையில் ஐந்து ஆண்டுகள் முன்பு லாட்வியன் பெண் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உமேஷ் மற்றும் உதயன்குமார் என அடையாளம் காணப்பட்டனர். மார்ச் 14, 2018 அன்று, லாட்வியாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வர்கலா கடற்கரையில் காணாமல் போனார். அந்த பெண் கடைசியாக ஆட்டோ ரிக்ஷாவில் கோவளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவில்லை. பின்னர், போலீசார் அவரது உடலை ஏப்ரல் 20, 2018 அன்று மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் ஆண்ட்ரூ மற்றும் சகோதரி இல்சியுடன் வந்திருந்தார் என்று கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக மூவரும் கேரளா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.