மணிகண்டனுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க : உயர்நீதிமன்றம் சென்ற சாந்தினி
டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மணிகண்டனோடு சென்றதாகவும், தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே தன்னை அழைத்துச் சென்றதாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாடோடிகள் பட நடிகை சாந்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மணிகண்டனோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து , அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகவும், நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி கடந்த வாரம் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
சாந்தினியின் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவுச் செய்தனர்.
காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அடுத்து கைது செய்யப்படலாம என நினைத்த மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். மனுவில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக செயல்பட்டு வரும் சாந்தினி மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என்று நடிகை சாந்தினி மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை என்றும் அதனால் தன்னால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போல ஒரு பெண் தனக்கு கிடைத்தால் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என அவர் தெரிவித்ததாகவும், ஆனால் தான் முதலில் இதை மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல் மனைவியிடம் சட்டப்படி விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால் மணிகண்டனோடு வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.
டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மணிகண்டனோடு சென்றதாகவும், தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே தன்னை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ள சாந்தினி, மூன்று முறை கருத்தரித்த போது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதையெல்லாம் தான் சகித்துக் கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இருவரின் மனுக்களும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது