‛என் கணவருக்கு ஆதரவா பஞ்சாயத்து செய்யுறாங்க’ போலீசார் மீது நடிகை ராதா புகார்
நடிகை ராதா தனக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளார்.
‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் முரளியுடன் இணைந்து நடித்தவர் நடிகை ராதா. 38 வயதான நடிகை ராதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர், இருவரும் சென்னையில் உள்ள சாலி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரும் காவல் உதவி ஆய்வாளருமான வசந்தராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், கணவன் மனைவி இருவரிடமும் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையை அடுத்து இருவரும் சமாதானம் ஆகினர். மேலும், நடிகை ராதாவும் வசந்தராஜா மீதான தனது புகாரை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை ராதா சென்னை, பரங்கிமலையில் இணை ஆணையர் நரேந்திரன் நாயரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
“ கடந்த ஏப்ரல் 14-ந் தேதி எனது கணவரும், காவல் உதவி ஆய்வாளருமான வசந்தராஜா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அந்த புகார் மீது விசாரிக்க வேண்டும் என என்னை செல்போன் மூலமாக அழைத்து பேசிய காவல் உதவி ஆய்வாளர் பாரதி, காவல்நிலையத்தில் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்னுடன் காரில் வா என்று கூறி அழைத்துச் சென்றார். பின்னர், எனது கணவரையும் அழைத்து வந்து இருவரும் சமாதானமாக செல்லும்படி கூறியதுடன், புகாரை திரும்ப பெற்று நல்லபடியாக வாழுங்கள் என்று உதவி ஆய்வாளர் பாரதி வற்புறுத்தினார்.
அப்படி இல்லையென்றால் வசந்தராஜா மீது எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என எழுதி கொடுக்கும்படி சொன்னார். எனது கணவரும் நல்லபடியாக சேர்ந்து வாழ்வதாக மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தார்.
இந்த நிலையில், வசந்தராஜா எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். காவல் உதவி ஆய்வாளர்கள் பாரதி, இளம்பரிதி ஆகியோர் எனது ஆட்கள்தான். நீ என்ன புகார் கொடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. போலீசில் எழுதி கொடுத்ததை எல்லாம் அழித்துவிட்டேன் என கூறினார். இதுபற்றி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக கேட்டபோது வசந்தராஜா எழுதி கொடுத்த மன்னிப்பு கடிதம் அதில் இல்லை. எனவே, வசந்தராஜாவுக்கு ஆதரவாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் இளம்பரிதி, பாரதி மற்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த வசந்தராஜா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதாவின் புகார் அளித்ததின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ராதாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.