Arya: ஜெர்மன் பெண் ஏமாற்றப்பட்ட புகார்: விசாரணையில் ஆஜரான நடிகர் ஆர்யா!
ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகர் ஆர்யா மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஆர்யா நேற்று இரவு நேரில் ஆஜரானார்.
ஆஜரான அவரை காவல் ஆய்வாளர் கீதா விசாரணை செய்துள்ளார். ஆனால், இந்த புகார் குறித்து ஆர்யா தரப்பில் இருந்து விளக்கம் தரப்படவில்லை. இதனால், இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் இல்லை.
இதுவரை கிடைத்த தகவல்படி, ஜெர்மனியைச் சேர்ந்த ஈழத்தமிழ் பெண்ணான வித்ஜா என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ஆர்யா, வெஸ்டர்ன்யூனியன் மூலமாக ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் என்னை திருமணம் செய்துகொள்ளாமல் சாயிஷாவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்கிறார் என தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள், வாட்ஸ் அப் சாட் உள்ளிட்ட விவரங்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த புகார் பின்னர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஜெர்மனியில் இருந்தவாறே வழக்கறிஞர் மூலம், சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தார் வித்ஜா. அதில், என்னிடம் வாங்கிய பணத்தைத் தான் சார்பட்டா, அரண்மனை 3, மலையாளத் திரைப்படம் ரெண்டகம் உள்ளிட்ட படங்களுக்கு பயன்படுத்தியுள்ளார். அதனால் சிபிசிஐடி வழக்கை முடிக்கும் வரை மேற்கண்ட படங்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வித்ஜா புகார் தொடர்பான விசாரணை விவரங்களை ஆகஸ்ட் 17-இல் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே ஆர்யா தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த புகாரை சிபிசிஐடி கிடப்பில் போட்டு இருக்கலாம் என வித்ஜாவின் வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆர்யா. இவர் ஆரம்பம், வட்டாரம், அறிந்தும் அறியாமலும், உள்ளம் கேட்குமே, பட்டியல், ஆரம்பம் உள்ளிட்ட பலதிரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்தப்படத்திற்கு கட்டுமஸ்தான உடலை கொண்டு வர ஆர்யா சில வருடங்கள் உழைத்ததாக பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். சார்பட்டாவால் ஆர்யாவுக்கு பாராட்டுகள் குவியத் தொடங்கிய நிலையில் அவர் மீது ஒரு புகாரும் வந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஆர்யா மீது பெண் ஒருவர் சிபிசிஐடியிடம் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். அந்த விவகாரம் இப்போது மீண்டும் பூதகரமாக கிளம்பியுள்ளது.